35 சபைகளிலும் தமிழரசுக் கட்சி தலைமைக்கு முயற்சி
தமிழர் தாயகத்தில் 35க்கும் குறையாத உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில் அந்தச் சபைகளில் எல்லாம் மேயர், நகர பிதா, தவிசாளர் பதவிகளைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி முழுமூச்சாக முயற்சிக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று மாலை நடைபெற்ற, கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இவ்வாறான முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பங்கேற்றவர்கள்
கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவின் உறுப்பினர்களான பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், எக்ஸ். குலநாயகம், எஸ்.குகதாசன் எம்.பி., ப.சத்தியலிங்கம் எம்.பி., இரா.சாணக்கியன் எம்.பி., சி.சிறீதரன் எம்.பி., த.கலையரசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அரசியல் குழுவின் மற்றொரு உறுப்பினரான கி.துரரைராஜசிங்கம் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் 35க்கும் குறையாக சபைகளில் முன்னிலை பெற்றுள்ளது.
ஒவ்வொரு சபையிலும் தலைமைப் பதவி
அத்தகைய முன்னிலை பெற்ற ஒவ்வொரு சபையிலும் தலைமைப் பதவியைப் பெறுவதற்கு கட்சி முயற்சிக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் ஏனைய தமிழ் பேசும் கட்சிகளோடு ஆதரவு கேட்டு தொடர்பாடல் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
குறிப்பாக கிழக்கில் தமிழ் பேசும் கட்சிகள் என்ற முறையில் முஸ்லிம்களின் கட்சிகளோடும் ஆதரவு கேட்டு பேச்சு நடத்துவது குறித்தும் மேற்படி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |