தமிழ் எழுத்தாளரின் அடிப்படை உரிமை மீறல்: மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கியுள்ள தீர்ப்பு
தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த, இரண்டு புத்தகங்களை சுங்கத் திணைக்களம் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், அவற்றை உடனடியாக விடுவிக்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக, 2026 மார்ச் 27 அன்று சென்னையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீபச்செல்வனின் 4 தமிழ் புத்தகங்களை இலங்கை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்தது.
சட்டப்பூர்வக் காரணங்கள்
எனினும், கலைக்குழு மற்றும் அரச இலக்கிய உப குழுவின் மதிப்பீட்டிற்குப் பிறகு, 'பயங்கரவாதி' மற்றும் 'சயனைட்' ஆகிய இரு புத்தகங்கள் புனைகதைகள் என வகைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டன.

எனினும், "இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்" (75 பிரதிகள்)"எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்" (147 பிரதிகள்) என்பன சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விசாரணைகளின்படி, சுங்கக் கட்டளைச் சட்டம் அல்லது தண்டனைச் சட்டக் கோவையின் கீழ், இந்தப் புத்தகங்களைத் தடுத்து வைப்பதற்குப் போதுமான சட்டப்பூர்வக் காரணங்களை சுங்கத் திணைக்களம் நிரூபிக்கத் தவறிவிட்டது.
புத்தகங்களில் உள்ள சில பகுதிகள் மனக்கசப்பை அல்லது கவலையை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், அவை நேரடியாக வன்முறையைத் தூண்டுவதாக இல்லை.
எனவே, இந்த தடை தேவையற்ற மற்றும் நியாயமற்ற முன் கூட்டிய தணிக்கையாகும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள புத்தகப் பிரதிகளை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.