தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு! மறுப்பு தெரிவித்த அருண் ஹேமச்சந்திரா
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக உப்புவெளி பிரதேச சபைத் தவிசாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (15.10.2026) வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன எழுப்பிய, தவிசாளரின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்து விளக்கமளிக்க முற்பட்டபோது, அங்கு காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றது.
அபிவிருத்தித் திட்டங்கள்
இதனையடுத்து, கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்காமல் தவிசாளர் வெளியேறியதை அவதானிக்க முடிந்தது.

திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு, ஏனைய பிரதேசங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுவதாகத் தவிசாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், உப்புவெளி பிரதேச சபையின் செயற்பாடுகளைக் குழப்புவதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்சாட்டு
இவ்விடயங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் இன, மத அல்லது பிரதேச வேறுபாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதில்லை என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் சில எதிர்க்கட்சியினர் இனரீதியான பாகுபாடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டுவது முற்றிலும் தவறானது எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், மக்களின் அபிவிருத்தித் தேவைகளை அரசியல் நோக்கில் அணுகுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.