ஞானசாரருக்கான பேரணியில் நடந்த தாக்குதல்.. அம்பலமான பிக்குவின் நாடகம்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலை கோரி கண்டியிலிருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு ஆதரவு தெரிவித்த நபர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.
நேற்று வீரகுல பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இச்சம்பவம், போக்குவரத்து நெரிசலினால் ஏற்பட்ட மோதலினால் சம்பவித்ததே அன்றி பேரணியுடன் தொடர்புடைய தாக்குதல் அல்ல என பொலிஸார் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
பேரணிக்கு உதவி செய்த நபர் ஒருவர் தலைக்கவசத்தால் சிலரால் தாக்கப்பட்டதாக தித்தகல்ல ஆனந்தசிறி தேரர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட காணொளியை தொடர்ந்து பொலிஸார் இந்த விளக்கத்தை அளித்துள்ளனர்.
வெளியான காணொளி..
எனினும், விசாரணைகளின்படி, காயமடைந்த நபர் குறித்த பேரணியுடன் தொடர்புடையவர் அல்ல என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காக லொறி ஒன்றில் பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின்படி, வீதியவத்தை தேவாலயத்திற்கு அருகில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் போது அவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் பின்னர் தலைக்கவசத்தால் தாக்கும் அளவுக்கு வன்முறையாக மாறியுள்ளது. காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, இச்சம்பவத்தில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடும் எச்சரிக்கை
காயமடைந்த நபரின் காயங்களைக் காட்டி, அவரை பேரணியின் ஆதரவாளர் எனக் கூறி, ஆனந்தசிறி தேரர் இந்த காணொளியை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவம் பேரணியுடன் எந்தவிதத்திலும் தொடர்புடையது அல்ல என்று கூறிய பொலிஸார், சமூக வலைதளங்கள் மூலம் குறித்த துறவி போலித் தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் வீரகுல பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய பொய் அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.