ஆசியக் கிண்ண மகுடத்திற்காக இன்று பலப்பரீட்சை... இலங்கை ஏ vs பாகிஸ்தான் ஏ
2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிரிக்கெட் பேரவையின் (ACC) ஆடவர் ஆசியக் கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியும், நடப்புச் செம்பியனான பாகிஸ்தான் ஏ அணியும் இன்று (29) மோதுகின்றன.
கட்டாரின் டோஹாவில் அமைந்துள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த 50 ஓவர் இறுதிப் போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இறுதிப்போட்டி
பவன் ரத்நாயக்க தலைமையிலான இலங்கை ஏ அணி, களம் இறங்குகிறது இதற்கு முன்னர் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இந்த தொடரில் செம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்த முறையும் வெற்றி பெற்றால் இலங்கை தனது மூன்றாவது செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதுடன், பாகிஸ்தானின் சாதனையையும் சமன் செய்யும். இலங்கை ஏ அணி அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

மறுபுறம், பாகிஸ்தான் ஏ அணி பங்களாதேஷ் ஏ அணியை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் சினெத் ஜயவர்தன மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் முக்கிய பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, பாகிஸ்தான் அணியில் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் கொண்ட ஹசன் நவாஸ் மற்றும் அணித்தலைவர் அப்துல் சமத் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.