மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..!
அனைத்தையும் இழந்து, இழப்பதற்கும் எதுவும் இன்றி, பெறுவதற்கும் வழியேதும் தெரியாது, போக்கற்றுக் கிடக்கும் ஈழத்தமிழ் அரசியல் பரப்புக்கு அவ்வப்போது குடுகுடுப்புகாரர்களாக குறி சொல்லும் தமிழரசு கட்சி அரசியல் குடுகுடுப்பிகள் வரிசையில் இப்போது சுமந்திரன் முன்னணிக்கு வந்திருக்கிறார்.
கடந்த வாரம் உடுக்கடித்து படிகள் ஏதுமற்ற மாகாண சபை என்ற கழுமரத்தில் தான் ஏறத் தயார் என அறிவித்திருக்கிறார். நடத்தப்படும் என சொல்லப்படும் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தான் களமிறங்க விருப்பம் தெரிவித்திருக்கும் இந்தக் குடுகுடுப்புச் செய்தி தமிழ் ஊடகப் பரப்பில் பரவலாக பேசப்படுகிறது. இது பற்றிய ஒரு நடைமுறைப் பார்வையை பார்த்துவிடுவோம்.
முதலில் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரன் போட்டி போடுவதற்கான அறிவிப்பு எந்தச் சூழலில் மேற்கொள்ளப்பட்டது என்பதனை நோக்க வேண்டும்.
கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய போது அதற்கு எதிராக மிக ஆக்ரோசமாக பேசியவரும், எதிராக செயல்பட்டது மாத்திரமன்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாதவர், தோல்வி நிச்சயம் என்று அறியப்பட்ட சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்போம் என்று தன்னிச்சையாக முடிவெடுத்து தமிழரசு கட்சியை சஜித் பக்கம் இழுத்துச் சென்று வெல்ல முடியாத ஒருவருக்கு ஆதரவளித்து தமிழ் வாக்குகளை நாசப்படுத்தியவர்.
யாழ்ப்பாண தேர்தல் தொகுதி
தமிழ்த்தேசிய எழுர்ச்சிக்கு தடையாக இருந்தவர். அதனை அடுத்து பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இதனால் தமிழரசு கட்சியில் எந்த வகிவாகத்தையும் வகிப்பதற்கான அதிகாரபூர்வ உறித்துக்கள் அற்ற நிலையில் பதில் செயலாளராக இருந்த சத்திய லிங்கத்தை பதவி விலக செய்ய வைத்து அதன் மூலம் தன்னை கட்சியின் பதில் செயலாளராக நிலைநிறுத்தியவர்.
இப்போது தானே செயலாளர் என்று கூறி தமிழரசு கட்சியை தவறான வழியில் ஓட்டிச் செல்லும் பதவியை பின் கதவால் கைப்பற்றியவர். இப்போது மக்களின் பிரதிநிதியாக வருவதற்கு ஒரு வழி அவருக்கு தேவையாக இருக்கிறது.
அந்த வழி மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது என்று அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் இரண்டு வழிகளில் அவருக்கான மக்கள் பிரதிநிதி என்ற அதிகாரபூர்வ அந்தஸ்து கிடைக்க வழியுண்டு.
தமிழரசி கட்சியை பொறுத்த அளவில் வடமாகாண சபை தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அதில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை கட்சி மட்டத்தில் சி.வி.கே சிவஞானம், ஸ்ரீதரன், மற்றும் சுமந்திரன் ஆகிய மூவருக்குமே உரித்து அதிகம் என கட்சிக்குள் ஒரு கருத்தியலை விதைத்தும், அதனை வளர்த்தும், அதனை ஒரு கருத்து மண்டலமாக நிலைநிறுத்தியும் விட்டார்கள்.
இந்தச் சூழலில் சிவி கே சிவஞானம், அவருடைய வயோதிப நிலையும், அதே நேரத்தில் கடந்த தேர்தல்களில் தோல்வி அடைந்தவர் என்ற நிலையிலும், டக்லஸ் தேவானந்தவை ஸ்ரீதர் தியேட்டரில் சந்தித்தமையால் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் மத்தியில் ஏற்பட்ட பாரிய எதிர்ப்பும், அதிருப்தியும் காரணமாக அவர் போட்டியில் பங்குபற்றுவதை தவிர்ப்பார், அல்லது சுமந்திரனால் தவிர்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டு தடுக்கப்படுவார்.
சக்கர வியூகம்
அதனை சுமந்திரன் சாதித்தும் காட்டுவார் என்பதில் யாருக்கம் சந்தேகமும் கிடையாது. ஆனால் அடுத்த போட்டியாளராக நிற்கக்கூடிய ஸ்ரீதரனைப் பொறுத்தளவில் அவர் இரண்டு பக்க கத்திக்குள் அகப்பட்டு இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சுமந்திரன் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு விருப்பம் தெரிவித்ததன் மூலம் ஸ்ரீதரனை ஒரு சக்கர வியூகத்திற்குள் வளைத்து விட்டிருக்கிறார் என்று சொல்வதே பொருந்தும்.
இங்கே ஸ்ரீதரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதுதான் சுமந்திரனின் மூலோபாயம். ஸ்ரீதரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவதன் மூலம் சுமந்திரன் இயல்பாகவே வியர்வை இன்றி களைப்பின்றி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை பெற்று விடுவார். அதுவே அவருடைய இலக்குமாகும்.
எதுவுமற்ற மாகாண சபையில் நின்று குப்பை கொட்டுவதற்கு சுமந்திரன் தயார் இல்லை. அவர் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது கத்திக் கூச்சலிடுவதற்கே விருப்பப்படுவார் அதுவே கொழும்பை மையப்படுத்திய அரசியலாகவும் கொழும்பில் தனது சுய தொழில் விருத்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவி நல்ல விளம்பரமாகவும் அமையும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் ஸ்ரீதரனுக்கு அடுத்த நிலையில் வாக்குகளைப் பெற்றவர் சுமந்திரன் என்ற அடிப்படையில் ஸ்ரீதரன் பதவி விலக செய்யும் பட்சத்தில் சுமந்திரன் இயல்பாகவே நாடாளுமன்ற உறுப்பினராகிவிடுவார்.
அது அவருக்கு மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தை கொடுக்கும். இதனை குறிவைத்துத்தான் மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தான் நிற்க தயார் என அறிவித்திருக்கிறார்.
அதன் மூலம் ஸ்ரீதரனைப் போட்டிக்கு இழுத்து தனது இலக்கை அடைவது தான். இங்கே ஸ்ரீதரணை பொறுத்தளவில் இருதலைக்கொல்லி எறும்பு நிலையிலே இருக்கிறார். அவர் வடமாகாணசபை முதலமைச்சராக வருவது என்பது அவருடைய ஆளுமைக்கும், அவருடைய அரசியல் வாழ்வுக்கும் உயர்ந்த பதவிதான்.
அரசியல் எதிரி
அதனை அடைவதன் மூலம் அவர் தமிழ் மக்களின் தலைவர் என்ற நிலையான நிலைக்கு உயர முடியும். ஆனால் அவ்வாறு அவர் முதலமைச்சர் வேட்பாளராக தானாக முன்வந்து நின்றால் தனது பதவியில் இருந்து விலகுவதன் மூலம் தமிழரசு கட்சிக்குள் தன்னுடைய அரசியல் எதிரியாக அல்லது அரசியல் தலைமைத்துவ போட்டியாளன் என்ற சுமந்திரனுக்கு இப்போது தோல்வி அடைந்த தலைவர் என்ற நிலையை மாற்றி மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தை வழங்குவதாக அமையும்.
அது ஸ்ரீதரனை மேலும் பலவீனப்படுத்தும் என்பதையும் அவர் அறிவார். அதுமட்டுமல்ல இன்றைய அரசியல் சூழமைவில் தமிழரசு கட்சி மாகாணசபை தேர்தலில் அதிக ஆசனங்களை பெறக்கூடிய நிலையிலும் இல்லை. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அனைத்து தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளையும் அரவணைத்து ஒரு கூட்டு முன்னணியை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் மென்மேலும் அதிகரித்துச் செல்கின்றன. ஆகவே இப்போது இருக்கிற நிலையில் தமிழரசு கட்சி வெல்லுமா என்ற ஐயம் பலருக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
இதனையும் தாண்டி ஒருவேளை வட மாகாண சபையில் தமிழரசு கட்சி ஆட்சி அமைத்து ஸ்ரீதரன் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தாலும் அந்த நாற்காலி அவருக்கு முற்படுக்கையாகவே அமையும். கடந்த மாகாணசபை முதலமைச்சராக இருந்த சி.வி விக்னேஸ்வரன் சுமந்திரனுக்கு இடையிலான முறுகல் நிலையானது விக்னேஸ்வரனை பதவியில் இருந்து தூக்கி எறியும் நிலை வரைக்கும் கொண்டு சென்றது.
கட்சிக்காரர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து அகற்ற முற்பட்டமையை இங்கே ஞாபகப்படுத்த வேண்டும்.
இந்நிலையில் மாகாண சபை தேர்தலுக்காக ஸ்ரீதரன் தனது பதவியில் இருந்து விலக செய்து மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாமல் போகும் இடத்தோ அல்லது மாகாண சபையில் வென்றதன் பின் தமிழரசு கட்சிக்குள் ஏற்படுத்தப்படும் அரசியல் குழிபறிப்புகள், கழுத்தறுப்புக்கள், கால்வாரல்கள், சட்டப் பயங்கரவாத செயல்களினால் ஸ்ரீதரனின் அரசியல் வாழ்வை மரணப்படுக்கைக்கு சென்று விடும்.
இவ்வாறுதான் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்ரீதரனால் தலைவர் நாற்காலியில் அமர முடியாதபடி சுமந்திரனின் அடியாட்கள் கொடுத்த சட்டப் பயங்கரவாத தாக்குதலின் அதிர்விலிருந்து இன்னும் சிறிதரன் மீளவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய ஒரு நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்பதனால் ஸ்ரீதரன் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிப்பார் என்றே ஊகிக்கலாம்.
ஆயினும் மேற்படியான அரசியல் சூழலில் சுமந்திரன் தான் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமை என்பது தான் தோல்வியடைந்த தலைவர் என்ற நிலையிலிருந்து மீண்டு தன்னை ஒரு தமிழ் சமூகத்தின் தலைவனாக காட்டவும், நிரூபிப்பதற்குமான ஒரு நாடகமாகவே இதனைப் பார்க்க வேண்டும்.
இதனை நாட்டு வழக்கில் கோயிலின் "வடக்கு வீதியில் விடப்பட்ட வானவெடி"யாகவே பார்க்கலாம். மாறாக அரசியல் செல்போக்கில் சுமந்திரன் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அவர் போட்டியிடுவதன் மூலம் தமிழரசு கட்சிக்கான வாக்கு வங்கியை மேலும் குறைப்பதாகவே அமையும்.
அது கடந்த உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான பேரம் பேசல்களில் தமிழ் மக்களால் பெரிதும் ஒதுக்கப்பட்டு இருக்கும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை இவர்கள் நேரில் சென்று சந்தித்தமையும், அவர்களுடன் கூட்டுக்கலை அமைத்தமையும் தமிழ் மக்கள் மத்தியில் இவர்கள் மீதான நம்பிக்கையை பெரிதும் இழக்க வைத்துள்ளது.
இந்தச் சூழமைவில் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது என்பது ஒரு விசப்பரீட்சையாகவே பார்க்கலாம். இது இவ்வாறு இருக்கையில் மாகாண சபை தேர்தல் நடக்குமா? என்ற கேள்வி இப்போது பலமாக எழுந்துள்ளது. இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாண சபையை முற்றாக எதிர்க்கின்ற ஒரு கட்சி. மாகாண சபை என்பது இந்திய தலையீடு என்பதுதான் இவர்களுடைய தத்துவார்த்த வியாக்கியானம்.
என்பிபி என்ற முகமூடி அணிந்திருக்கும் ஜேவிபினர் “தம்ம தீபக் கோட்பாட்டை“ முதன்மைப்படுத்துபவர்கள். சிங்கள பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள். தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகள் தேவையற்றது என்றும், தமிழ் மக்களுக்கு இலங்கை தீவில் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமே உண்டு என்றும் வாதிடுபவர்கள்.
இத்தகைய மனப்போக்கை கொண்ட இந்திய எதிர்ப்பு வாதத்தை முதன்மை ஆயுதமாக தூக்கிப் பிடித்திருக்கும் சிங்கள தேசியவாதிகள் எப்படி மாகாண சபை முறை தொடர்ந்து நிலை நிறுத்த முற்படுவர்? என்பதுதான் இங்கே முக்கியமானது. ஜேவிபியினர் மாகாண சபையை முற்றாக நிராகரிக்கின்றனர். “மாகாண சபை முறமையை நீக்குவோம்“ என்பதை அவர்களுடைய தேர்தல் கோஷமாகவும் அமைந்திருந்தது.
எனவே மாகாணசபை தேர்தலை நடத்தி தமது கட்சிக்குள் மோதலை உருவாக்கவோ, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தவோ இன்றைய சூழலில் ஜேவிபினர் ஒருபோதும் தயார் இல்லை. இந்த நிலையில் மாகாண சபை தேர்தலை அவர்கள் நடத்துவதற்கான வாய்ப்புகள் மிக அரிதினும் அரிது. அதனையும் மீறி இந்தியாவின் அழுத்தங்காரணமாக மாகாணசபை தேர்தலை நடத்தினாலும் அந்த மாகாண சபை சரியாக இயங்க முடியாது. அதற்கான நிதி வளங்களும் ஒதுக்கீடுகளும் சரிவர நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.
இது ஒருபுறம் இருக்க இன்று இருக்கின்ற 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறையில் தமிழ் மக்களுக்கு ஏதாவது கிடைத்து விடுமா? என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். 1987ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட தீர்வு என்பது தமிழர் தாயகத்தை அங்கீகரிப்பதாகவும், வடகிழக்கு மாகாணத்தை தற்காலிக இணைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான பிராந்திய அலகு ஒன்றை கொடுக்கின்ற ஒரு தீர்வு திட்டமாகவும் அது அமைந்திருந்தது.
அத்தீர்வுதிட்டத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண அரசுக்கு வழங்கப்பட்டிருந்தது. அது மாத்திரமன்றி மத்திய அரசின் மாவட்ட அரசாங்க அதிபர்கள் மாகாண முதலமைச்சருக்கு கட்டுப்பட வேண்டிய கடப்பாடும் அத்த தீர்வு திட்டம் கொண்டிருந்தது.
அத்தகைய மாகாண அரசினுடைய அதிகாரங்களை கடந்த 38 ஆண்டுகளில் படிப்படியாக பறித்து வட- கிழக்கு மாகாணங்களை இரண்டாக நிரந்தரமாக பிரித்து எந்த ஒரு அதிகாரமும் அற்ற ஒரு மாகாண சபையாக, அதற்கான நிதி ஒதுக்கீடுகளை கூட செய்யாத ஒரு அதிகார அலகாக “பழம் இருக்க சுளை தோண்டிய“ வெற்றுக் கோதாக இருக்கின்ற மாகாண சபைக்கு முதலமைச்சர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.
இந்த மாகாண சபை முறைமை தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் தமிழ் அரசியல் பரப்பில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளும், செய்யப்பட வேண்டிய அரசியல் நகர்வுகளும் பற்றி யாரும் பேசுவதில்லை. வெறும் வெற்றுக் கோஷங்கள் பற்றியே பேசப்படுகின்றது.
இதற்கு ஒரு உதாரணமாக “13ஆம் திருத்தச் சட்டத்தை நாம் எதிர்க்கிறோம்“ என்று சொல்வது ஒரு வகையில் படுமோசமான அயோக்கியத்தனம்.13ஆம் திருத்தச் சட்டம் என்பது இலங்கை அரசியல் யாப்பின் ஒரு அங்கம்.
இந்திய பிரதமர்
இலங்கை அரசியல் யாப்பை நிராகரித்து இலங்கையில் யாரும் அரசின் எந்த பதவி நிலையிலும் இருக்க முடியாது. இலங்கையின் அரசியல் யாப்பை மீறுவது குற்றச்செயலாகவே இலங்கை அரசியல் சட்டத்தில் உள்ளது.
தமிழரசியல் தலைமைகள் தாம் பன்மூன்றாம் திருத்தத்தை எதிர்க்கிறோம் என்பது தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற, முட்டாள்கள் ஆக்ஸ்ரீகின்ற அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு.
அதே நேரத்தில் 13ம் திருத்தச் சட்டம் என்பது இலங்கை இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் ஒரு என்ற அடிப்படையில் அந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் படி வலியுறுத்த வேண்டியது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உடைய பொறுப்பும் கடமை ஆகும். அதனை அவர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.
அதற்காகப் போராட வேண்டும். இல்லாவிடில் அதனை நடைமுறைப்படுத்த கோரி நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். கடந்த 38 ஆண்டுகளில் பன்மூன்றாம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு எந்த ஒரு தமிழ் அரசியல் தலைவர்களும் வழக்கொன்றை தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்தை நாடவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
சரி 13ஆம் திருத்தச் சட்டம் எமக்கு எந்தப் பயனையும் தராது, அதில் எந்த அதிகாரங்களும் இல்லை என்று இவர்கள் கருதும் பட்சத்தில் இவர்கள் அடுத்ததாக எடுக்க கூடிய அரசியல் நடவடிக்கை என்னவென்றால் அது இந்தியாவை நோக்கி நியாயம் கேட்பதுதான். ஏனெனில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கை அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் பொறுப்பாக இலங்கையின் ஜனாதிபதி கையெழுத்து விட்டார்.
மறுபுறத்தில் தமிழ் மக்களின் சார்பில் இந்திய பிரதமர் கையெழுத்து விட்டார் என்பதிலிருந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழு உரித்தும் இந்தியாவிற்கு உண்டு. ஆகவே இந்தியாவின் அனுசரணையுடனும், அழுத்தத்துடனுமே இலங்கை - இந்தியா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு நடைமுறைப்படுத்த முனைந்தால் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கள் என்பது இப்போது இருக்கின்ற அரசியல் சூழலில் தமிழ் மக்களுக்கான நெருக்கடிகளை தீர்க்கின்ற வாய்ப்பைத் தரவல்லது.
38 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கான அதிகாரத்தை தரவல்ல ஒரு பிராந்திய அலகைக் கொண்ட ஒரு தீர்வுத்திட்டத்தை இந்திய அரசு முன்வைத்து அதனை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருக்கின்ற பின்னணியில் அதற்குப் பின்னர் தீர்வு போதாது என்பதனாலேயே ஒரு நீண்ட போராட்டத்தை தமிழர்கள் நடத்தினார்கள்.
அதற்கு பின்னரும் நாம் 38 ஆண்டுகளுக்கு முந்திய ஒரு தீர்வு திட்டத்தைத் தானும் இப்போதுமே பெற முடியாமல் இருக்கின்றோம் என்று சொன்னால் அது தமிழ் தலைமைகளுடைய தவறான அரசியல் போக்கும் கையாலாகத்தனங்களையுமே வெளிப்படுத்துவதாக அமையும்.
ஆகவே மாகாண சபை தேர்தல் என்ற மாயமானுக்கு பின்னே ஓடாமல், மாகாண முதலமைச்சர் என்ற படியில்லாத கழுமரத்தில் ஏறி சறுக்கி விழாமல் தமிழ் மக்களுக்கு அர்த்த புஸ்திடியுள்ள அரசியல் தீர்வை அடைவதற்கான மேற்படி இரண்டு மார்க்கங்களையும் தமிழரசியல் தலைமைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதுவே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 10 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா




