தமிழ் மக்கள் பொதுச்சபை
கொள்கை அடித்தளம் இல்லாமல் கட்சிகளை ஒருங்கிணைப்பது தற்காலிகமானது செயற்கையானது என்று சுயாதீனக் குழு நம்புகிறது.
தலைவர்களையும் வாக்காளர்களையும் நீண்டகால நோக்கில் பண்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியத்தையும் சமூகப் பொறுப்பையும் சுயாதீனக் குழு ஏற்றுக்கொள்கிறது.
தமிழ் அரசியலில் சிவில் சமூகங்கள் தலையிடுவது என்பது தமிழ் ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும்.
தார்மீகத் தலையீடு
இனிவரும் காலங்களில் தமிழ் அரசியலின் மீதும் கட்சிகளின் மீதும் அதிகரித்த தார்மீகத் தலையீட்டைச் செய்வதற்கு தேவையான வளர்ச்சியைத் தமிழ் சிவில் சமூகங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்.
இது கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக் குழுவின் அறிக்கையின் இறுதிப்பகுதி.
அப்பொழுது நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்காக மேற்படி சுயாதீனக்குழு உழைத்தது. அதற்காக கட்சித் தலைவர்களை சந்தித்தது.
எனினும் சந்திப்பின் விபரங்களை ஓர் அறிக்கையாக வெளியிட்டதுக்குமப்பால் அக்குழு தொடர்ந்து செயல்படவில்லை. அந்த அறிக்கையில் கூறப்பட்டபடி ஒரு மக்கள் அமைப்புக்கான தேவை தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வந்தது.
அந்த விவாதத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்படி சுயாதீன குழுவிலும் அங்கம் வகித்தவர்கள்தான்.
இவர்கள் அனைவரும் ஐந்தாண்டு கால அனுபவங்களின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வவுனியாவில் ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தினார்கள்.
32பொதுமக்கள் அமைப்புகள் கலந்துகொண்ட சந்திப்பின் முடிவில் வவுனியா தீர்மானம் என்று அழைக்கப்படும் ஒரு தீர்மானம் வெளியிடப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டது.
அக்கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு ஒரு குழு உருவாக்கப்பட்டது. அக்குழு தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சித் தலைவர்களையும் கட்சிப் பிரமுகர்களையும் கட்சி சாரா முக்கியஸ்தர்களையும் சந்தித்தது.
அதேசமயம் அச்சத்திப்புகளுக்குச் சமாந்தரமாக மக்கள் அமைப்புகள், மாவட்ட மட்ட ஒன்றியங்கள் போன்றவற்றையும் அக்குழு சந்தித்தது.
கூட்டுறவாளர் ஒன்றியங்கள்;கடல் தொழிலாளர் ஒன்றியங்கள்;வணிகர் கழகங்கள்;பார ஊர்திகள் சங்கங்கள் போன்றவற்றை அக்குழு சந்தித்தது.
இச்சந்திப்புக்களின் போது மக்கள் ஒரு பொது வேட்பாளருக்கு அமோகமாக ஆதரவு தெரிவித்தார்கள். எந்த ஒரு சந்திப்பிலும் யாரும் அது தேவைதானா என்று கேட்கவில்லை.
கடந்த 15 ஆண்டு கால அரசியல் செயற்பாடுகளின் மீது அவர்கள் சலிப்பும் விரக்தியும் அடைந்து விட்டார்கள்.அவர்கள் மாற்றத்தைக் கேட்கிறார்கள் என்று சந்திப்பில் கலந்து கொண்ட குடிமக்கள் சமூக பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள்.
இதில் அரசியல் கட்சிகளுடான சந்திப்பின் விவரங்களை அக்குழு கடந்த வாரம் ஓர் அறிக்கையாக வெளியிட்டது.
அந்த அறிக்கையானது கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் பேரவையின் சுயாதீனக்குழு வெளியிட்ட அறிக்கையோடு ஒரு விடயத்தில் அதிகம் ஒத்திருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் சில கட்சிகளைத்தவிர பெரும்பாலான ஏனைய கட்சிகளின் நிலைப்பாடுகள் ஏறக்குறைய ஒன்றுதான் என்பதே அந்த ஒற்றுமை.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ்மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக்குழு ஒரு கட்டத்துக்கு மேல் செயல்பட முடியவில்லை.
ஏனெனில் கட்சிகளை ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒருங்கிணைக்கும் சக்தி தமிழ் மக்கள் பேரவைக்கு இருக்கவில்லை.அதாவது மக்கள் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீட்டைச் செய்யக்கூடிய சக்தி மையங்களாக இருக்கவில்லை.
ஆயின், மக்கள் அமைப்புக்கள் தங்களைப் பலமான சக்தி மையங்களாக வளர்த்தெடுத்துக் கொண்டால்தான் தமிழ் அரசியலை ஒரு புதிய பண்பாட்டை நோக்கிச் செலுத்தலாம் என்பதே கடந்த 15 ஆண்டுகளில் கற்றுக் கொண்ட பாடமாகும்.
தமிழ்ப் பொது வேட்பாளர்
இந்தப் பட்டறிவின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் கூடிய குடிமக்கள் அமைப்புகள் மீண்டும் கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவெளிக்குப் பின் கடந்த ஐந்தாம் திகதி,தியாகி சிவக்குமாரனின் நினைவு நாளன்று, யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள ராஜா கிரீம் ஹவுஸ் மண்டபத்தில் கூடின.
இக்கூட்டத்தில் மேற்படி குடிமக்கள் சமூகங்களின் ஒன்றிணைவானது தன்னை “தமிழ்மக்கள் பொதுச்சபை”-Tamil people’s Assembly-என்று பெயரிட்டுக் கொண்டது.
தமிழ் மக்கள் பொதுச் சபையானது தனது செயற்பாட்டுத் தேவைகளுக்காக கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறது.
தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி கட்டமைப்புகள் தேவையான புதிய கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டு தமிழ்மக்கள் பொதுச்சபையைப் பலப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 15ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மரபுரிமைப் பேரவை, பி2 பி மக்கள் இயக்கம் போன்றவற்றின் தொடர்ச்சியாக மற்றொரு புதிய மக்கள் அமைப்பு உதயமாகியிருக்கிறது.
தமிழ்மக்கள் பொதுச்சபையானது ஒரு நிரந்தர பெயர் அல்லவென்றும் எதிர்காலத்தில் அதன் பெயர் அதன் கட்டமைப்புக்குள் உட்பட அனைத்தும் பொருத்தமான விதங்களில் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குடிமக்கள் சமூகங்கள் தங்களை பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கைதான். அதற்குச் சமாந்தரமாக பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்த பின் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து ஒரு கலப்புப் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிகிறது.
இக்கலப்புப் பொதுக் கட்டமைப்பு அதற்கு வேண்டிய உப கட்டமைப்புகளை உருவாக்கி அவற்றின்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் என்றும் தெரிகிறது.
பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கான ஓர் உபகுழுவேட்பாளருக்குடைய தேர்தல் அறிக்கை தயாரிக்க ஓர் உபகுழு நிதி நடவடிக்கைகளுக்கு ஓர் உபகுழு என்று பல்வேறு உபகுழுக்கள் உருவாக்கப்பட்டு ஒரு பொது வேட்பாளர் முன்னுறுத்தப்படுவார் என்றும் தெரிகிறது.
தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் இணைந்து கூட்டாக உழைத்தால் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தும் விடயம் ஒப்பீட்டளவில் இலகுவானதாக இருக்கும்.அது மட்டுமல்ல தமிழ் அரசியலில் அது ஒரு புதிய பண்பாட்டை வளர்க்கும்.
தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பொறுப்புக்கூறும் ஒரு பண்பாடு அது. அவ்வாறு பொறுப்புக் கூறும் பண்புடைய ஒரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கினால் அதன் விளைவாக கண்ணியமான,நேர்மையான, அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் அதிகமாக மேலெழுவார்கள்.
தனி நபர்களுக்காக, கட்சிக்காக வாக்குத் கேட்கும் மிதவாத அரசியல் பண்பாட்டை மாற்றி, தேசத்துக்காக வாக்கைத் திரட்டும் ஒரு புதிய பண்பாடு வளர்த்து எடுக்கப்படும்.
தமிழ் மக்கள் பொதுச்சபை
ஒருபுறம் தமிழ்மக்கள் தங்கள் தெரிந்தெடுத்த பிரதிநிதிகளை சந்தேகிக்கின்றார்கள்;திட்டுகிறார்கள்.இன்னொருபுறம் தமிழ்மக்கள் பல துண்டுகளாக உடைந்துபோய்க் காணப்படுகிறார்கள்.
அவிழ்த்து விடப்பட்ட பாக்கு மூட்டை போல சிதறும் ஒரு மக்கள் கூட்டத்தை,ஒவ்வொரு நெல் மணியாகத் திரட்ட ஒரு புதிய அரசியல் பண்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.
அதற்கு ஜனாதிபதித் தேர்தலை ஒரு களமாகப் பயன்படுத்துவது. தமிழ் மக்கள் பொதுச்சபையானது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தையொட்டி உருவாக்கப்பட்டாலும் அதன் இறுதி இலக்கு நீண்ட காலத் தரிசனத்தைக் கொண்டது என்பது வவுனியா தீர்மானத்தின் இறுதிப் பந்தியில் கூறப்பட்டிருக்கிறது.
ஒரு தேசிய இனமாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உச்சபட்ச தீர்வு ஒன்றைப் பெறும் விதத்தில் தமிழ் மக்களை பலப்படுத்துவதற்கு இவ்வாறான மக்கள் அமைப்புக்கள் அவசியம்.தமிழரசியலை ஒரு புதிய பண்பாட்டை நோக்கித் திரட்டுவதற்கு இது போன்ற மக்கள் அமைப்புக்கள் அவசியம்.
கடந்த நூற்றாண்டில் கட்சிகள் தோன்றுவதற்கு முன்பு தமிழ் அரசியலில், மக்கள் அமைப்புக்கள், மகா சபைகள், வாலிப காங்கிரஸ்கள் போன்றன தோன்றின.
கடந்த நூற்றாண்டில் முதலாவது தசாப்தத்தில் யாழ்ப்பாண சங்கம், மட்டக்களப்புச் சங்கம் போன்றன தோன்றின. அதன்பின் 1921இல் தமிழர் மகாசபை தொடங்கியது.
1924இல் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் தொடங்கியது.அதன்பின் கட்சிகள் அரங்கினுள் பிரவேசித்தன.
கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் முதலில் ஈழத் தமிழர் இளைஞர் இயக்கம் 1968ல் தொடங்கியது.பின்னர் தமிழ் மாணவர் பேரவை 1970 இலும், தமிழ் இளைஞர் பேரவை 1973இலும், 1976அளவில் “மனிதன்” இயக்கமும் தோன்றின.
ஆயுதப் போராட்ட காலகட்டத்திலும் முதல் இரண்டு கட்ட ஈழப் போர்களின் போதும் அன்னையர் முன்னணிகள், பிரஜைகள் குழுக்கள் போன்ற மக்கள் அமைப்புகள் தோன்றின.
1980களின் ஆரம்பத்தில் கிராமிய உழைப்பாளர் சங்கம் தோன்றியது.1981இல் யாழ் பல்கலைக் கழகத்தில் மறுமலர்ச்சிக் கழகம் தோன்றியது.
1985இல் யாழ் பல்கலைக்கழக கலாசாரக் குழு தோன்றியது. அதன் தொடர்ச்சியம் வளர்ச்சியாக,1990களின் தொடக்கத்தில் அரங்கச் செயற்பாட்டுக்குழு தோன்றியது.
புதிய மக்கள் இயக்கம்
அரங்கச் செயற்பாட்டுக்கு குழுவே பொங்கு தமிழ் பேரெழுச்சியை நொதிக்கச் செய்தது. யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு பின் யாழ்ப்பாணத்தில் முதலில் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கான மக்கள் அமைப்பு என்ற அமைப்பு இயங்கியது.
அதன் தொடர்ச்சியாக மனித நேய அமைப்புக்களின் இணையம் என்ற ஓர் அமைப்பு இயங்கியது.
இறுதிக்கட்டப் போரில் அதாவது நாலாம் கட்ட ஈழப் போரில், சில கிறிஸ்தவ மனிதநேய அமைப்புகளைத் தவிர, குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் இயக்கங்கள் எவையும் இயங்க முடியாத அளவுக்கு சிவில் வெளி ஒடுக்கப்பட்டிருந்தது.
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் தமிழ்மக்கள் பேரவை, தமிழ் மரபுரிமைப் பேரவை, பி2 பி மக்கள் இயக்கம் போன்ற அமைப்புகள் தோன்றின.
அதாவது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக மக்கள் அமைப்புகள் தோன்றியிருக்கின்றன.
அரசியல் இயக்கங்கள், இளையோர் இயக்கங்கள், மத மறுமலர்ச்சி இயக்கங்கள், பிரஜைகள் குழுக்கள், அன்னையர் முன்னணிகள், கலாசாரக் குழுக்கள்….என்று தமிழ்மக்கள் ஏதோ ஒரு மக்கள் இயக்கத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கி வந்திருக்கிறார்கள்.
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்மக்கள் மத்தியில் மகத்தான மக்கள் அமைப்பு உருவாக்கிகளும் நிறுவன உருவாக்கிகளும் தோன்றியிருக்கிறார்கள்.
இந்த விடயத்தில் தமிழ் மக்களிடம் மிகச் செழிப்பான ஒரு பாரம்பரியம் உண்டு.அந்த செழிப்பான பாரம்பரிய அடித்தளத்தில் இருந்து இப்பொழுது ஒரு புதிய மக்கள் இயக்கம் தோன்றியிருக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 11 June, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.