நரேந்திர மோடியின் பதவியேற்பில் பங்கேற்கும் தமிழகப்பெண்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழத்தின் தொடருந்து சாரதியான பெண்ணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்வு, டெல்லி (Delhi) குடியரசு தலைவர் மாளிகையில் நாளை (09) இரவு 7.15 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி, தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பதவிப்பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார்.
சமூகத்தின் பல்வேறு மட்டம்
இதன் மூலம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பின் 3வது தடவையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.
இதனிடையே குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், தூய்மை பணியாளர்கள், கலைஞர்கள் என சமூகத்தின் பல்வேறு மட்டத்தில் இருந்தும் மொத்தம் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தொடருந்து சாரதிப் பெண்ணான ஐஸ்வர்யா மேனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர் வந்தே பாரத் தொடருந்துகளில் பணியாற்றி வருகிறார்.
இதேபோல் மகாராஸ்டிராவைச் சேர்ந்த, இந்தியாவின் முதல் தொடருந்து சாரதிப் பெண்ணான சுரேகா யாதவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |