தமிழகம் கோவையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்: வெளியாகியுள்ள தகவல்கள்
அண்மையில் தமிழகத்தின் கோவையில் இடம்பெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், 24 ஆண்டுகளுக்கு முன்னர், கோவையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கும், கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு பாரதீய ஜனதா கட்சியின் அப்போதைய தேசியத் தலைவர் எல்.கே.அத்வானியை குறிவைத்து இந்த வெடிகுண்டுகள் நடத்தப்பட்டன. இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள்
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி, 29 வயதான ஜமீஷா முபீனின் வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட 75 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. கோவையில் அவர் சென்ற காரில் சிலிண்டர் வெடித்து சிதறியதை அடுத்தே அவை கைப்பற்றப்பட்டன.
இதனைக்கொண்டு நாசவேலைகளை மேற்கொள்ளும் சதி முயற்சியில் முபீன் முக்கிய பங்கு வகித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கோவையில் சிறப்புக் குழு நடத்திய விசாரணையில், முபீன் தற்கொலைப் படை அல்ல என்றும், அவருக்கு வெடிமருந்துகளைக் கையாளத் தெரியாது என்றும் கூறியுள்ளனர். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
உண்மையில் அவருக்கு தற்கொலை எண்ணம் இருந்தது. ஆனால் அவர் ஒரு குண்டுவெடிப்பில் தன்னை தானே கொல்லத் திட்டமிடவில்லை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள ஒரு பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
முபீர் பற்றி வெளியாகிய தகவல்
முபீனை அறிந்தவர்களின் தகவல்படி, அவருக்கு அதிக நண்பர்கள் இல்லை என்றும் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்ததாகவும் கூறினார்கள்.
கடந்த 2019ஆம் ஆண்டு வரை, அவர் ஒரு புத்தகக் கடையில் பணிபுரிந்தார், பின்னர், உக்கடம் ஜிஎம் நகரில் உள்ள அவரது வீட்டில் இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவினர் சோதனை நடத்திய பின்னர், அந்த வீட்டில் இருந்து அவரை வெளியேறுமாறு கோரப்பட்டது.
பின்னர் பழைய துணிகளை விற்று பிழைப்பு நடத்த ஆரம்பித்தார். அவர் 5-10 ரூபாய்க்கு பழைய சட்டைகளைப் பெற்றும் அவற்றை சுத்தம் செய்து 15 ரூபாய்களுக்கு விற்பனை செய்யும் தொழிலையே அவர் இதுவரை காலம் மேற்கொண்டு வந்தார் என்று அவரின் உறவினரொருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,
முபீனும் மற்றவர்களும் கோயம்புத்தூரில் குறைந்தது ஐந்து இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டிருந்தனர். அவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை சேகரித்துள்ளார்.
முபீன் மேலும் சிலருடன் சேர்ந்து தனது வீட்டில் இருந்து பொருட்களை மாற்றுவதைக் காண முடிந்தது.
எனவே, அவர்கள் தாக்குதலைத் திட்டமிட்டுள்ளனர் என்பது புரிந்து கொள்ளப்பட்டது, ஆனால் இலக்கு வேறுபட்டது, என்று விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தி ஃபெடரலுக்கு தெரிவித்தார்.
தேடலின் போது, முபின் ஐந்து இடங்களின் பெயர்களை எழுதி வைத்திருந்த ஒரு துண்டு காகிதத்தை நாங்கள் மீட்டோம். இவை அவரது இலக்குகளாக இருக்கலாம்.
இந்த ஐந்து இடங்களில் பொலிஸ் ஆணையர் அலுவலகம், மாவட்ட நிர்வாகி அலுவலகம், ரயில் நிலையம், ரேஸ் கோர்ஸ், விக்டோரியா நகர மண்டபம் ஆகிய இடங்கள் உள்ளன.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவம்
தமிழக பொலிஸாரின் கூற்றுப்படி, வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவரான பெரோஸ் இஸ்மாயிலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுடன் தொடர்புடைய இரண்டு பேரை, தாம் கேரள சிறையில் சந்தித்ததாக ஒப்புக்கொண்டார்.
அண்டை மாநிலத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது அசாருதீன் மற்றும் ரஷீத் அலி ஆகியோரையே அவர் சந்தித்தார் என்றும், சந்திப்பின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அசாருதீனும், அலியும் அண்டை மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றிற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு முபீன் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
எனினும் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த 1998ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புக்கும் சமீபத்திய சிலிண்டர் வெடிப்புக்கும் இடையேயான தொடர்பு அல்-உம்மா என்ற பயங்கரவாத அமைப்பின் தொடர்பில் இருந்தே வெளிப்பட்டுள்ளது.
இப்போது கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவர் - முகமது தல்கா அல்லது டல்கா அல்-உம்மா தலைவர் சையத் அகமது பாஷாவின் சகோதரர் நவாப் கானின் மகன் ஆவார், முகமது தல்கா,1998 தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுள் தண்டனை மற்றும் 27
ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.