கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்
தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வு கனேடிய நாடாளுமன்ற வளாகத்தில் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, கியூபெக் தமிழ் சமூக அமைப்பு மற்றும் அமைச்சரும், ஸ்காபுரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் ஒருங்கமைப்பில் நேற்று முன்தினம்(07.05.2024) பல கனேடிய தமிழ் அமைப்புகளின் கூட்டாக நடைபெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
இந்நிகழ்வில் பல கனேடிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ் உணர்வாளர்கள் என பலரும் பங்குபற்றியுள்ளனர்.
தமிழின அழிப்பு நினைவு நாளாக (Tamil Genocide Remembrance Day) மே18 கனேடிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு இரண்டாவது வருடமாகவும் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15 வருட வலிமிகுந்த நினைவுநாளை ஒட்டி இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிகழ்வு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு நிகழ்வில் கலந்துகொண்ட பெருந்திரளானோர் ஒவ்வொருவராக மலர்வணக்கம் வணக்கம் செலுத்திய பின்னர் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் நினைவுப் பேருரையை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பித்து இன்றைய வாழும் சாட்சியங்களில் ஒருவரான பிரணவன் உரை நிகழ்த்தியுள்ளார்.
உணர்வுபூர்வமாக தன் கண்முன்னே நடந்த இனப்படுகொலையின் அழியா நினைவுகளை அவர் மீட்டிய போது அரங்கமே அமைதியாக கண்கலங்கி நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதி விசாரணை
தொடர்ந்து கனேடிய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்புரை ஆற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர் அன்னி கவுட்ராகிஸ் (Annie Koutrakis) தனது உரையில் இன்று கனேடிய நாடாளுமன்றத்தில் தமிழ் இனப்படுகொலை நாளை ஒட்டி தான் உரையாற்றியது பற்றியும் தொடர்ச்சியாக நீதிவேண்டிய பயணத்தின் தனது ஆதரவு தொடரும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
பழமைவாத கட்சியின் சார்பில் சிறப்புரை ஆற்றிய கார்னெட் ஜீனியஸ்(Garnet Genius) , இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன் என்ற வகையில் அதன் வலியினை அறிந்தவன் என்ற வகையில் இனப்படு கொலையினால் பாதிக்கபட்ட மக்களுக்காக தொடர்ந்து நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து நாங்கள் பாடுபடுவோம்.
அத்தோடு கனேடிய அரசு தொடர்ந்து சர்வதேச நாடுகளின் உதவியுடன் நீதி விசாரணை கொடுப்பதுக்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் அத்துடன் தமிழ் இனப்படு கொலையினை புரிந்தவர்கள் மீது கடுமையான தடைகளை மேலும் விதிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்சியாக உரையாற்றிய கனேடிய பெண்கள் விவகார அமைச்சர் மார்சி ஐயன் (Marci Len), 2004 சுனாமிக்குப் பின்னரான காலப்பகுதியில் தான் இலங்கையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய காலத்திலேயே தமிழ் மக்கள் படும் அவலங்களை தான் அனுபவ ரீதியாக பலர் சொல்லக்கேட்டு அறிந்திருந்ததாகவும் இன்றுவரை இந்த அவலம் தொடர்வது வேதனைக்குரியது என்பதையும் கவலையுடன் பகிர்ந்துகொண்டதுடன் நீதிக்கான பயணத்தில் தனது ஆதரவையும் வெளிப்படுத்தினார்.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி(Mélanie Joly) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீர் சுபேரி(Sameer Zuberi), டிம் லூயிஸ்(Tim Louis), லியா டெய்லர் ராய்(Leah Taylor Roy) ஆகியோரும் மற்றும் பல ராஜதந்திரிகளும்( Diplomats) பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |