தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதாக கூறுவது வெறும் அரசியல் கோஷமே: ஐ.தே.க அமைப்பாளர் ஆதங்கம்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற விடயமெல்லாம் வெறும் அரசியல் கோஷங்கள் மாத்திரமே என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (United Nations Party) இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் (Subbiah Anandakumar) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கு வடக்கில் உள்ள ஓரிரு கட்சிகள் முன்னெடுத்து வரும் முயற்சி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சம உரிமைகள்
மேலும் தெரிவிக்கையில், “இலங்கையிலே இனவாதமற்ற, மதவாதமற்ற கட்சியென்றால் அது ஐக்கிய தேசியக் கட்சியே. அனைத்து இன மக்களும் ஓரணியில் திரளக்கூடிய கட்சியாகவும் அக்கட்சி திகழ்கின்றது.
ஐ.தே.கவின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க, ‘ஸ்ரீலங்கா பெஸ்ட்’ என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்படுபவர். அவரிடம் இனவாதம், மதவாதம் கிடையாது.
அனைவரும் இலங்கையர்கள், அனைவருக்கும் சம உரிமைகள் உண்டு என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்து வருகின்றார்.
2010இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ரணிலின் கோரிக்கையின் பிரகாரம் தமிழ் பேசும் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினர்.
மக்களின் அபிவிருத்தி
இதன்பின்னர் ரணில் கூறியதால் சஜித்தையும் ஆதரித்தனர். அடுத்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். இதனைக் குழப்புவதற்குச் சில தமிழ் அரசியல்வாதிகள் முற்படக்கூடாது.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியின் கீழ்தான் தமிழ் பேசும் மக்களின் அபிவிருத்தி அரசியல் மற்றும் உரிமை அரசியல் என்பவற்றை வென்றெடுக்க முடியும்.
எப்போதும் உண்மையைக் கூறி அரசியல் நடத்தும் ரணில் விக்ரமசிங்க, தமிழ் பேசும்
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வுகளை வழங்குவார்.
எனவே, ரணிலின் வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பங்காளிகளாக வேண்டும்.
இதைவிடுத்து, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கோஷம் ஊடாக மக்களைக் குழப்பி, சாதகமான சூழலை திசை திருப்ப முற்படக்கூடாது. அவ்வாறு செய்தால் அது தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகவே அமையும்" என்றும் மாவட்ட அமைப்பாளர் சுப்பையா ஆனந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |