தமிழ் மொழித்தினப் போட்டிகள் தவிர்க்கப்பட்டமை தொடர்பில் அதிபர்கள் சங்கம் கவலை தெரிவிப்பு
அகில இலங்கை ரீதியில் வருடாந்தம் இடம்பெறும் தமிழ் மொழித்தினப் போட்டிகளில் இருந்து ஆரம்பகல்வி வகுப்புகளுக்கான போட்டி நிகழ்வுகளை தவிர்த்தமை தொடர்பில் அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "அகில இலங்கை தமிழ் மொழித்தின சுற்று நிருபத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் போட்டி நிகழ்வுகள் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும்.
அத்துடன், சமூக நாடகப் போட்டி இணைக்கப்படல் வேண்டியதுடன் மாகாண மட்டத்தில் கூத்து நிகழ்வுகளும் உள்வாங்கப்படல் வேண்டும்.
சுற்று நிருபம்
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கிடையே அகில இலங்கை ரீதியிலான தமிழ் மொழித் தினப் போட்டி நிகழ்வில் முதலாம் பிரிவிற்குள் தரம் 04, 05 வகுப்புகள் அடங்குகின்றன.
இப்பிரிவில் எழுத்தாக்கம், பேச்சி, வாசிப்பு, கதைக்கூறல், பாவோதல், இசையும் அசைவும் ஆகிய போட்டிகள் இடம்பெற்று வந்த நிலையில் இவ்வருடம் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் முதலாம் பிரிவு போட்டி நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும்.
ஆரம்ப பிரிவு பாடத்திட்டத்தில் இணைப்பாடவிதான செயற்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் இப் போட்டி நிகழ்வுகள் தமிழ் பேசும் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு பெரிதும் துணை நிற்கும் செயற்பாடாக அமைகிறது” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
