போராட்டத்தில் குதித்த தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள்
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தையும் தொழில்சார் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வேலைநிறுத்தமானது, நேற்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகப் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தமது வழமையான கடமைகளைப் புறக்கணித்துப் பங்கேற்றனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.எம். அகமட் முனாஸ் மற்றும் நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர் சங்கத் தலைவர் ஏ.ஆர்.எம். சுல்பி ஆகியோரின் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இதனால் பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் அலுவலகச் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெட்டிக் குறைக்கப்பட்ட சலுகைகளை மீள வழங்குதல் மற்றும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள சம்பள முரண்பாடுகளுக்கு உரிய தீர்வு காணுதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, "ஊழியர்கள் கேட்பது ஆடம்பர வாழ்க்கையல்ல; தமது குடும்பத்துடன் கண்ணியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான நியாயமான உரிமைகளையே" எனத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த நவம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்குத் திருப்திகரமான பதிலை வழங்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
உடனடிப் பேச்சுவார்த்தை
குறிப்பாக, டிசம்பர் 01ஆம் திகதி உயர்கல்வி அமைச்சின் செலவினத் தலைப்பு தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகத் தொழிற்சங்க உறுப்பினர்களைக் கொழும்புக்கு அழைத்து மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதியிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தல் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அருகிலுள்ள பிரதான நகரங்களில் எதிர்ப்புச் சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
நிர்வாகம், பரீட்சைகள், நூலகம், நிதி முகாமைத்துவம், தொழில்நுட்பம், ஆய்வகங்கள் மற்றும் மாணவர் சேவைகள் எனப் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு செயற்பாட்டின் பின்னணியிலும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது.
எனவே, பல்கலைக்கழகங்களில் இயல்பு நிலையைத் தொடரவும், ஊழியர்களின் குடும்பங்களில் நிம்மதி மலரவும் அரசாங்கம் தொழிற்சங்கங்களுடன் உடனடிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து நியாயமான தீர்வை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





