சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் சிறி வோல்ட்டிற்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (11.6.2026) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை மற்றும் விவசாயத்துறையின் மேம்பாடு தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
காணி தொடர்பான பிரச்சினை
மேலும், கிழக்கு மாகாணத்தில் நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை அரசும், ஜனாதிபதியும் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், மாகாண சபையும் மத்திய அரசும் இணைந்து காணி பிரச்சினைகளைத் தீர்க்கும் செயன்முறையை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் ஆளுநர் விளக்கமளித்தார்.
இலங்கையின் தொழில்துறை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளமை பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
பேரவலத்தின் பின்னணியில் வெளிவந்த கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் சுரேஷ் சலேவிடம் ஏற்பட்ட மாற்றம்
ஊழலற்ற ஆட்சி
கிழக்கு மாகாணத்தில் சமூக ஒற்றுமை மற்றும் இனங்களுக்கிடையேயான சமாதானம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய இலங்கை அரசு முன்னெடுத்து வரும் ஊழலற்ற ஆட்சி குறித்து உயர்ஸ்தானிகர் பாராட்டுத் தெரிவித்தார்.
உயர்ஸ்தானிகரின் இலங்கையிலான பணிக்காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில், தனது உத்தியோகபூர்வ பணிகளை நிறைவு செய்து நாட்டை விட்டு புறப்படுவதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.


