பாக் ஜலசந்தி கடலை சுமார் 10 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ள வீர வீராங்கனைகள்(Video)
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்.
தலைமன்னாரிலிருந்து நேற்று (13.03.2023) அதிகாலை 5 மணிக்கு கடலில் குதித்து நீந்த தொடங்கிய 7 பேரும் நேற்று மாலை 3.45 மணி அளவில் 10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்தனர்.
இதில் பெங்களூரைச் சேர்ந்த (1) பிரசாந்த் ராஜண்ணா, (2) ராஜசேகர் துபரஹள்ளி, (3) ஜெயப்பிரகாஷ் முனியல் பாய் மற்றும் (4) அஜத் அஞ்சனப்பா ஆகிய நான்கு நீச்சல் வீரர்களும் (5) சுமா ராவ், (6) சிவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி மற்றும் (7) மஞ்சரி சாவ்ச்சாரியா ஆகிய மூன்று நீச்சல் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
பயிற்சி பெற்ற 7 பேரும் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக் ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு அனுமதி கோரியிருந்தனர்.
இந்தியாவில் வரவேற்பை பெற்றனர்
இந்திய - இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் சுஜேத்தா தேப் பர்மன் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னார் சென்றுள்ளனர்.
நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் பொலிஸார், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் அரிச்சல்முனையில் வரவேற்றுள்ளனர்.
இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக் ஜலசந்தி கடற்பகுதியை
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேனியைச் சேர்ந்த ஆர்.ஜெய் ஜஸ்வந்த் தனது 10
வயதிலும், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் என்ற
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளிட்ட சிலர் குறைந்த வயதுகளில் நீந்தி
சென்றமை குறிப்பிடத்தக்கது.