தலைமறைவாகியிருந்த டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது
டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(02.10.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரட்டை கொலைச் சம்பவம்
டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் இருவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த 37 வயதுடைய சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
பதுளை - தெமோதரையைச் சேர்ந்த மனோஜ் அல்லது மனோஹரன் என அழைக்கப்படும் குறித்த சந்தேக நபர், முன்னதாக பொகவந்தலாவை பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, அவர் கண்டி பல்லேகலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
யாழ்ப்பாணத்தில் கைது
இந்த நிலையில், யாழ்ப்பாண பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி குமார்வேல் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் யாழ்ப்பாணத்தில் கடையொன்றுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சந்தேக நபர் இன்று(02) கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னர் பதுளை ஹாலிஎல, வட்டவளை, விக்டன், டிக்கோயா, லிந்துலை, பொகவந்தலாவை, புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் நடமாடியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை தொடர்புடைய வழக்கிற்காக மீண்டும் அழைத்துச் செல்வதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.