மதிப்பெண்ணை காரணம் காட்டி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம் - விரிவுரையாளர் அதிரடி கைது
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் மாணவர்களுக்கு தவறான காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் கொடுத்து வந்த 55 வயதுடைய விரிவுரையாளர் ஒருவர், அம்பாறை பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(01.10.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் விடுக்கப்பட்ட மிரட்டல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை பாடங்களுக்கு மதிப்பெண்கள்(Marks) வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.

இதனால் இந்த சம்பவம் தொடர்பில் வெளியில் முறைப்பாடு கொடுத்தால் மாணவர்களது மதிப்பெண்களை குறைத்து பதிவிடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இவருடைய மிரட்டல்களுக்கு பயந்து, குறித்த மாணவர்கள் இதுவரை காலமும் முறைப்பாடு கொடுக்காமல் மௌனம் காத்து வந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் இந்த சம்பவ்ம தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
அதன் பின்னர், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட பொலிஸ் குழுவினர் சந்தேக நபரான 55 வயதுடைய விரிவுரையாளரை கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று(02.10.2026) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.