விசாரணை அதிகாரிகளுக்கு புத்தகத்தை பரிசளித்த பந்துல
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு தாம் எழுதிய புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சி காலத்தில் இடம் பெற்ற ஊழல் மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் பந்துல குணவர்தனவிடம் ஆணைக்குழு அதிகாரிகள் இன்றைய தினம்(02) நீண்ட நேரம் விசாரணை நடத்தியிருந்தனர்.
விசாரணை
விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பந்துல குணவர்தன தாம் எழுதிய நூலொன்றை அதிகாரிகளிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். குறிப்பாக அரச கொள்முதல் நடவடிக்கைகள், அமைச்சரவையின் செயலாளர்களின் அதிகாரங்கள் தொடர்பில் இந்த புத்தகத்தில் தான் விரிவாக விளக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் ஊழல் மோசடிகள் இடம் பெற்றிருந்தால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது பழிவாங்கும் நோக்கங்களின் அடிப்படையிலோ விசாரணைகள் நடத்தப்படுவது ஏற்புடையது அல்ல என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். எனினும் இந்த விசாரணையின் போது அவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கை போக்கினை தாம் அவதானிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.