மட்டக்களப்பில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு விளக்கமறியல்(Photo)
மட்டக்களப்பில் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞரை, எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று (8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமிலதீவு பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி வீடொன்றின் அறையில் வைக்கப்பட்டிருந்த 6 பவுண் தாலிக்கொடி மற்றும் தோடு என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் எம்.ஜி.பி.எம்.எம். ஜெசூலி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை (7) இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர், புத்தூர் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், திருடப்பட்ட நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்று(8) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, அவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



