கஹவத்தை இளைஞரின் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது
அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த கஹவத்தை இளைஞர் ஒருவரின் மரணம் தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதின(21) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கஹவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கிய இளைஞர் ஒருவர் அண்மையில் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்களால் கையில் விலங்கு மாட்டி கடத்திச் செல்லப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கைது
சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை குற்றத்தடுப்புப்பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய கிரிபத்கொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
விசாரணை
ஹோமாகம ஹந்தயா எனப்படும் முன்னணி போதைப் பொருள் வர்த்தகரினால் வழங்கப்பட்ட 12 லட்சம் ரூபா ஒப்பந்தத்துக்கு அமைவாகவே தான் குறித்த இளைஞரை கடத்திச் சென்று சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றதாகவும் எனினும் ஒப்பந்தப் பிரகாரம் முழு பணத்தொகையும் தனக்கு தராமல் ஏமாற்றி விடப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான விசாரணைகளை பேலியாகொடை குற்றத் தடுப்புப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




