பறிபோகும் தமிழர் நிலங்கள்! வருமுன் காத்துக்கொள்ள வேண்டும்: சுரேந்திரன்
வருமுன் காக்கும் பொறிமுறைகளை தமிழ்த் தரப்பினர் ஒருமித்துக் கையாள்வதே ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க ஒரே வழி என ரெலோவின் பேச்சாளர் கு. சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்கள் மீதான நில, மொழி மற்றும் கலாச்சார ரீதியான ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்த முன்னேற்பாடுகளை கொண்ட பொறிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும்.
நடக்கும் முன் தடுக்க வேண்டும்
நடந்து முடிந்தவைகளுக்காக போராடும் நடைமுறை ஒருபுறம் இருக்க, நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்தக் கூடிய கட்டமைப்பை தமிழர்கள் உருவாக்க வேண்டும்.
தையிட்டி விகாரை கட்டி எழுப்பப்பட்டுள்ள விவகாரம் இதற்கு சிறந்த உதாரணமாகும். மாகாண சபை முறைமை முடிவுக்கு வந்த பின்னர் இதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது.
தனியார் ஒரு சிலருக்கு சொந்தமான காணி நிலங்களிலேயே இந்த விகாரை
கட்டப்பட்டுள்ளது.
ஒரு சில உரிமையாளர்கள் வழக்கு தொடுப்பதற்கு ஆர்வமாக முயற்சி
செய்தபோதிலும் சரியான தரப்பினரிடம் அவர்கள் செல்லவில்லை.
அதேபோன்று அரசியல் தரப்பிலும் வழக்கு தொடுப்பதற்கு முயற்சி செய்து சில காணி உரிமையாளர்களை சந்தித்தபோது அந்த காணி உரிமையாளர்கள் வழக்கு தொடுப்பதில் அக்கறை கொண்டிருக்கவில்லை.
வழக்கு தொடுப்பதற்கு அக்கறை கொண்ட தனியார் காணி உரிமையாளரும் அரசியல் தரப்பினரும் ஒருவரை ஒருவர் இறுதிவரை சந்திக்கவில்லை.
அதனால் விகாரை கட்டப்படும் வரைக்கும் தனியாரால் நடவடிக்கை எடுக்க முடியாத அல்லது அரசியல் தரப்பை நாட முடியாத சூழ்நிலையில் இருந்திருப்பது துரதிஷ்டமே.
ஆக்கிரமிப்புக்கு எதிரான பொறிமுறை
ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்தி பலமான கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்ற எமது கோரிக்கையின் பிரதான நோக்கம், அரசியல் தீர்வு எட்டப்படும் வரையில் இப்படியான ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தி அதை எம்மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான பொறிமுறையாக கையாள வேண்டும் என்பதே.
அதை ஒருபோதும் அரசியல் தீர்வாக நாம் கோரவில்லை. அரசியல் முதிர்ச்சியற்ற, தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள அபாயத்தை உணராத சில தரப்புக்கள் அதை நாங்கள் அரசியல் தீர்வாக கோருகிறோம் என்று மக்களை தவறாக திசை திருப்பி தெரிந்தோ தெரியாமலோ அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போயிருக்கிறார்கள்.
இனியாவது நிலைமையை புரிந்து கொண்டு நமக்கான பொறிமுறைகளை வகுக்கவும், இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தி அதைப் பொறிமுறையாகக் கையாளவும் தமிழ்த் தரப்பு தயாராக வேண்டும்.
ஒவ்வொரு விடயத்திற்கும் விளக்க உரைகளை வழங்குவதும் கட்சி நலன்கள் மற்றும் தேர்தல் நோக்கங்களுக்காக தமிழ் மக்களை தவறாக திசை திருப்பி வழிநடத்த முற்படுவதும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உரம் சேர்க்குமே தவிர தமிழ் மக்களை காப்பதற்கு உதவாது.
இனியாவது தமிழ் மக்கள் ஒன்றிணைந்து நம்மை காக்கும்
பொறிமுறைகளை வகுத்துக் கொள்ளவும் இருப்பவற்றை சரியாகக் கையாளவும் முன் வர
வேண்டும் என கோரி நிற்கிறோம். அதுவே நிலையான அரசியல் தீர்வு வரும் வரை எமது
இனத்தின் இருப்பைத் தக்கவைக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.