ரணிலின் லண்டன் பயணம்! நீதிமன்றில் முன்னிலையான சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்..
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இது தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (28) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது பதவிக்காலத்தில் 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலேயே சமன் ஏக்கநாயக்க நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் குறித்த விஜயத்திற்கான நிதி அனுமதியை சமன் ஏக்கநாயக்கவே வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏக்கநாயக்கவை கைது செய்ய பொலிஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டன் சென்ற விவகாரம் தொடர்பான விசாரணையில் சமன் ஏக்கநாயக்கவை கைது செய்ய சட்டமா அதிபரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன.
குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் சுற்றிவளைப்பு
அதன்படி, சமன் ஏக்கநாயக்கவை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் குழு ஒன்று தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அவரை கைது செய்ய நேற்று (27) அவரது வீட்டிற்கு சென்ற போதிலும், அவர் வீட்டில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல், சமன் ஏக்கநாயக்க அடிக்கடி சுற்றித் திரியும் பல இடங்களுக்கு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்,
மேலும் இதுவரை அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இருப்பினும், அவர் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.