வரவு செலவுத்திட்டத்தின் வெற்றியும் தோல்வியும் பசில் கையில்
நாடு திரும்பும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் கலந்துரையாடிய பின்னர், அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அந்த கட்சியின் இறுதி முடிவு எடுக்கப்படும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாளை நாடு திரும்பும் பசில்
அமெரிக்காவில் தங்கியிருந்த பசில் ராஜபக்ச நேற்று அங்கிருந்து புறப்பட்டுள்ளதாகவும் அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவார் எனவும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.
வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் தாம் பரிந்துரைத்துள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சரவை மாற்றம் அவசியம் எனவும் அப்படியில்லை என்றால், வரவு செலவுத்திட்டம் தொடர்பில் சிக்கல் ஏற்படக்கூடும் என பொதுஜன பெரமுனவின் பிரதான நாடாளுமன்றக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தது.
எனினும் பொதுஜன பெரமுனவின் அழுத்தங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை.
ஜனாதிபதியிடம் உறுதிமொழியை பெற தயாராகும் மொட்டுக்கட்சி
இந்த நிலையில், வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமாயின், வரவு செலவுத்திட்டம் முடிவடைந்தவுடன் தமது அணிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வழங்கப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் நிலைப்பாடாக உள்ளது.
வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய அமைச்சரவை மாற்றம் தொடர்பிலும் வரவு செலவுத்திட்டத்திற்கு மொட்டுக்கட்சியின் ஒத்துழைப்பை வழங்குவது சம்பந்தமாகவும் இறுதி முடிவை எடுப்பது குறித்து பசில் ராஜபக்ச எதிர்வரும் திங்கள் கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர், ஜனாதிபதிக்கும், பசில் ராஜபக்சவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
