மினியாபோலிஸ் விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளருக்கு அழைப்பாணை உத்தரவு
மினியாபோலிஸில் அமெரிக்கக் குடிமக்கள் ஃபெடரல் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோம் உடனடி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என ஜனநாயக கட்சி செனட்டர் ஜோன் ஃபெட்டர்மேன் வலியுறுத்தியுள்ளார்.
மினியாபோலிஸில் இந்த ஒரே மாதத்தில் ஃபெடரல் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டாவது அமெரிக்கக் குடிமகன் அலெக்ஸ் ப்ரெட்டி என்பவர் ஆவார்.
இதற்கு முன்னர், ரெனி நிக்கோல் குட் என்ற பெண்மணியும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அழைப்பாணை உத்தரவு
அலெக்ஸ் ப்ரெட்டி கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் கிறிஸ்டி நோம் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்போது, உயிரிழந்த ப்ரெட்டியை "உள்நாட்டுப் பயங்கரவாதி" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆனால், சர்வதேச ஊடகமொன்று ஆய்வு செய்த காணொளி ஆதாரங்களின்படி, துப்பாக்கியால் சுடப்பட்ட போது ப்ரெட்டி கையில் துப்பாக்கி ஏதும் இல்லை என்பதும், அவர் அதிகாரிகளைத் தனது செல்போன் மூலம் படம் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தார் என்பதும் உறுதியாகியுள்ளது.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செனட்டர் ஜோன் ஃபெட்டர்மேன், "அமெரிக்கக் குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று கிறிஸ்டி நோம் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று நேரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகச் செனட் நீதிக்குழு முன் மார்ச் 3ஆம் திகதி முன்னிலையாகி விளக்கம் அளிக்க கிறிஸ்டி நோமிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.