புதுக்குடியிருப்பில் வீதியோரங்களில் கொட்டப்பட்ட குப்பையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியோரங்களில் நீண்ட நாட்களாக சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், பிரதேச சபை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டதால் அப்பகுதி கடும் அசுத்தமான சூழ்நிலையாக மாறியதுடன் துர்நாற்றம் வீசும் நிலையும் உருவாகியிருந்தது.
மேலும் குப்பைகளால் ஈர்க்கப்பட்ட யானைகள் கிராமப்பகுதிகளுக்குள் நுழையும் அபாய நிலையும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனமொன்றின் ஆவணங்கள்
பிரதேச சபையினர் குறித்த பகுதியை தொடர்ந்து சுத்தப்படுத்தி வந்தபோதிலும் மீண்டும் மீண்டும் வீதியோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததாக பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (13.02.2026) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, குறித்த இடத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டை பிரதிகள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொது இடங்களில் குப்பை கொட்டப்படுவதை ஆதாரங்களுடன் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இதற்கான எச்சரிக்கை பதாகைகளும் குறித்த பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.












