இரண்டு மாணவிகளை தகாத ரீதியில் அச்சுறுத்திய மாணவர்கள் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இணையத்தில் இரண்டு பாடசாலை மாணவிகளின் தவறான புகைப்படங்களை பகிர்வதாக அச்சுறுத்திய 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவரும் காலி மேலதிக நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் இருவரும் காலி மேலதிக நீதிமன்ற நீதிபதி லக்மினி விதானகம முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு 100,000 ரூபாய் சொந்த பிணையிலும் தலா இரண்டு சரீரப்பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இரண்டு சிறுவர்கள் மீதான நன்னடத்தை அறிக்கையை நீதிவான் கோரியுள்ளார். சந்தேகநபர்கள் அக்மீமன பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் 10ஆம் தர மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் முறைப்பாடு
அவர்கள் இருவரும் குறித்த மாணவிகளின் புகைப்படங்களை இரகசியமாக எடுத்து, தவறான புகைப்படங்களில் இருந்த முகங்களுக்கு பதிலாக குறித்த மாணவிகளின் முகங்களை மாற்றி இணையத்தில் பகிரப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த அச்சுறுத்தலால் அச்சமடைந்த சிறுமிகள் தமது பெற்றோர் ஊடாக அக்கீமன பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்தே மாணவர்கள் இருவரும், குற்றவியல் அச்சுறுத்தல் மற்றும் தகாத துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் அக்மீமன பொலிஸாரால், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் வழக்கு ஜூலை 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |