ஒட்டுசுட்டானில் முன்னாள் போராளி மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணை அச்சமூட்டும் செயற்பாடா..!
முன்னாள் போராளிகளின் இயல்பு வாழ்க்கையை குழப்பும் வண்ணம் ஒட்டுசுட்டானில் இராணுவத்தினரின் செயற்பாடொன்று அமைந்துள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள முன்னாள் போராளி ஒருவரிடம் இராணுவத்தினர் நடந்துகொண்ட முறை பொருத்தமற்றதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் தகவல்களை பெற வந்திருப்பதாக கூறி புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை விசாரணை செய்து சென்றுள்ளனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் சேர்ந்து வாழும் முன்னாள் போராளிகளை மீண்டு மீண்டும் தகவல்களை பெற என சென்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் படி நடந்து கொள்வது பொருத்தமற்றதாகும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விசாரணைக்கு வந்திருந்த இராணுவத்தினர்
(06.05.2024) அன்று காலையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் வீட்டுக்குச் சென்ற இருவர் தம்மை இராணுவத்தினர் என்றும் ஒரு பெயரைக் குறிப்பிட்டு அந்த படைப்பிரிவு முகாமில் இருந்து வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் தகவல்களை பெற்று வருவதாகவும் அவ்வாறே தன்னுடைய தகவல்களையும் பெற வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்ததாக முன்னாள் போராளி இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கிராம சேவகரிடம் சென்று கேட்டால் தன்னைப் பற்றிய தகவல்களை பெற முடியுமே என்று தான் அவர்களிடம் கேட்டிருந்ததற்கு இடங்களையும் தாங்கள் பார்க்க வேண்டும் என்ற பொருளில் தனக்கு பதிலளித்து இருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவர்களின் தோற்றமும் பேச்சும் அவர்கள் இராணுவத்தினர் தான் என்பதை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.எனினும் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் சொன்னது போல் சொன்ன பெயரில் இராணுவ முகாம் இல்லை எனவும் அது வேறு ஒரு இராணுவ முகாமே அவ்விடத்தில் இருப்பதாகவும் இவற்றை தான் சென்று பார்த்ததன் மூலம் உறுதிசெய்து கொண்டதாகவும் முன்னாள் போராளி குறிப்பிடுகின்றார்.
ஒட்டுசுட்டானில் புனர்வாழ்வளிக்கப்பட்ட பல முன்னாள் போராளிகள் உள்ள போதும் தன்னிடம் மட்டும் தான் அவர்கள் தன்னைப் பற்றிய தகவல்கள் தேவை என வந்திருப்பது தன்னை அச்சத்திற்குள்ளாக்குவதோடு மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அச்சுறுத்தும் செயற்பாடு
சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான இவரை அச்சுறுத்தும் செயற்பாடாக இராணுவத்தினர் வந்து விசாரித்துச் சென்றமை இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் பலரும் இது தொடர்பில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
நா.யோகேந்திரநாதனின் முப்பது நாட்களில் நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற நூலினை தலமையேற்று வெளியீடு செய்திருந்த தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் எழுத்தாளர் தீபச்செல்வனும் அண்மையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
ஈழ ஆர்வலரான தீபச்செல்வனின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை போடும் வகையில் அந்த விசாரணைகள் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுவதும் இங்கே நோக்கத்தக்கது.
அது போன்றதொரு அணுகுமுறையே ஒட்டுசுட்டானில் சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியிடம் மேற்கொண்டிருந்த விசாரணையும் நோக்கப்படல் வேண்டும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
நிர்வாக முறையற்ற அணுகல்
முள்ளிவாய்க்கால் போரின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பொது மன்னிப்பளிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் சேர்ந்து வாழும் சூழலினை அவர்களுக்கு புனர்வாழ்வமைச்சு ஏற்படுத்தப்படுத்திக் கொடுத்திருந்தது.
அத்தகைய முயற்சிகளின் போது பலதரப்பட்ட பாதுகாப்பு பிரிவினராலும் விசாரிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்தில் இயல்பாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வரும் போது அவர்களை அணுகும் முறை இராணுவ முறையற்றதாக இருக்க வேண்டும்.
கிராம சேவகரின் ஊடாக அல்லது புனர்வாழ்வமைச்சின் ஊடாகவே முன்னாள் போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.
எந்தவொரு இராணுவ முகாமிலிருந்தும் தொழில் முறையாகவோ அல்லது நிர்வாகவியல் முறையாகவோ நேரடியாக அணுக முடியாது என்ற சூழல் நடைமுறையில் இருக்க வேண்டும்.
அப்போது தான் முன்னாள் போராளிகளின் அமைதியான வாழ்வு உறுத்திப்படுத்தப்படுவதோடு அவர்களது பாதுகாப்பும் உரிய முறையில் பேணப்படும்.
முறைகேடான அணுகு முறைகள் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்வதால் அவர்கள் நெருக்கடிக்கு ஆளாவதோடு முன்னாள் போராளிகளை மீண்டும் போராடினால் தான் வாழ முடியும் என்ற இக்கட்டுக்குள் தள்ளிவிடும் என்பது திண்ணம்.
தாயகத்தில் முன்னாள் போராளிகள் அச்சமின்றி சுதந்திர மனநிலையோடு வாழவில்லையோ என்ற அச்சத்தினை இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படுத்த தவறவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
குற்றங்களைத் தடுப்பதற்கு பொருத்தமான முறையில் மனிதர்களுக்கேற்ற அணுகு முறையில் தொடர்பு கொள்ளுதலும் உதவி செய்யும் என்ற உண்மை உணரப்படுதல் வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |