தந்தை பெயர் தெரியாததால் பரீட்சை எழுதமாட்டேன்: யாழில் மகளின் பாசப் போராட்டம் வெற்றி!
தனது பிறப்புச் சான்றிதழில் அப்பாவின் பெயர் இல்லாமல் கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு செல்ல மாட்டேன் என விடாப்பிடியாக நின்ற மகளின் பாசப் போராட்டத்திற்கு பிரதேச செயலக அதிகாரிகளின் முயற்சியால் வெற்றி கிடைத்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகப் பிரிவு ஒன்றில் வதிவிடத்தைக் கொண்ட மாணவியின் தாயார் சிறு வயதிலிருந்தே கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
கணவர் வேறு பெண்ணுடன் வாழ்ந்து வருவதால் தனது பெண் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழை பதியாது காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
பதியப்படாத விடயம்
மகள் தற்போது கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான அடையாள அட்டையை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் தேவைப்பட்டபோது சான்றிதழ் பதியப்படாத விடயம் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஏன் தனது பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் பதியப்படவில்லை என்ற காரணம் மாணவிக்கு தெரிந்துள்ளது.
இந்நிலையில் குறித்த மாணவி, தனது தந்தையின் பெயர் தனது பிறப்புச் சான்றிதழில் வரவேண்டும், இல்லாவிட்டால் பரீட்சைக்கு தோற்ற மாட்டேன் என விடாப்பிடியாக நின்றுள்ளார்.
மாணவியின் கோரிக்கை
இதனை அறிந்த பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அதிகாரிகள் தாயாருடன் கலந்துரையாடி கணவனின் தொடர்பு இலக்கத்தை பெற்றுக் கொண்டு மாணவியின் கோரிக்கையை அவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அதிகாரிகளின் கோரிக்கைக்கு இணங்கிய தந்தை தனது பெயரை பிறப்புச் சான்றிதழில் பதிவதற்கு சம்மதித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
