வடக்கில் வலுமிக்க கூட்டுறவுத்துறையை உருவாக்க ஆளுநர் முயற்சி
வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மீண்டும் வலுவான பொருளாதார சக்தியாகக் கட்டியெழுப்புவதற்குக் கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் புதிய சிந்தனையும் மனமாற்றமும் ஏற்பட வேண்டும்.
அத்துடன், அலுவலக மட்டத்திலிருந்து செயற்படுவதைக் கடந்து, களத்துக்குச் சென்று சங்கங்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அவற்றை உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் நவீன முகாமைத்துவத்துடன் இணைத்து அபிவிருத்தி செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று(11.09.2026) வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுறவுத்துறையில் நடக்கும் முறைகேடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு காலத்தில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறை மக்கள் வாழ்க்கையோடும் உற்பத்தியோடும் நெருக்கமாக இணைந்து வலுவாகச் செயற்பட்டது. காலப்போக்கில் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முகாமைத்துவப் பலவீனங்கள் உள்ளிட்ட காரணங்களால் அதன் வலிமை குறைந்துள்ளது.

தாம் நான்கு மாவட்டங்களில் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலப்பகுதியில் கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்திக்காக பல்வேறு உதவிகளை மேற்கொண்டிருந்த போதிலும், சில நிர்வாகங்களின் முறைகேடுகள் மற்றும் பலவீனங்களால் அவை எதிர்பார்த்த பலனை வழங்கத் தவறியதால், ஒரு கட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மீதான தமது நம்பிக்கையே பாதிக்கப்பட்டது.
இந்த நிலையை மாற்றுவதற்குத் திறமையான, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறல் மிக்க முகாமைத்துவம் உருவாக்க வேண்டும்.
கூட்டுறவுத்துறையின் எதிர்காலம் நவீன முகாமைத்துவம், வெளிப்படையான கணக்கியல், மின்னணு நிதி முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் திறன், புதிய தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் உறுப்பினர்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும் என்றார்.