அமெரிக்கா - இஸ்ரேலுக்கு அடிபணிய மாட்டோம்! – ஈரான் ஜனாதிபதி அதிரடி
பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தைகள், இந்தியா மற்றும் ஈரான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பெசெஷ்கியான், இந்திய மதத் தலைவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார்.
புதிய வாய்ப்புகள்
அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே கலாசாரம், தொழில்நுட்பம், வர்த்தகம், அறிவியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் வழங்கிய சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தியாவுடனான உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஈரான் தயாராக இருப்பதாகக் கூறினார்.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பெசெஷ்கியான், ஈரானை அச்சுறுத்தும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார். பொதுமக்கள், பள்ளிகள் மற்றும் வைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் அவர் கண்டித்தார்.
இருமுறை சந்திப்பு
மேலும், ஈரான் மக்கள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் என்றும், அனைத்து மனிதர்களுக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பிரதமர் மோடியும் மேற்கு ஆசியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலமாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும், கடல் வழிச் சுதந்திரம், வர்த்தகம் மற்றும் கடற்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். மோடி மற்றும் பெசெஷ்கியான் இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri