கனடாவில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்! - புலம்பெயர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
கனடாவில் பதிவுசெய்யப்பட்ட செவிலியராக பணியாற்ற மொழித்திறன் தேவை என்பது தங்களின் கனவையை சிதைக்கும் ஒரு தடையாக இருப்பதாக புலம்பெயர் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு புலம்பெயர்ந்த Anne Ignacio மற்றும் அவரது பெற்றோர்கள் செவிலியர்களாக பட்டம் பெற்றவர்கள்.
ஆனால் ஆங்கிலத் தேர்ச்சி தேர்வில் பல முயற்சிகளுக்குப் பிறகு, அவர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்யும் கடினமான முடிவுக்கு வந்துள்ளனர். கனடாவில் புலம்பெயர் மக்கள் பதிவுசெய்யப்பட்ட செவிலியராக பணியாற்ற CELBAN அல்லது IELTS ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஒவ்வொருமுறை தேர்வுக்கும் 300 முதல் 400 டொலர்கள் செலவாகும் என குறிப்பிட்டுள்ள Anne Ignacio, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குறித்த தேர்ச்சியானது காலாவதியாகும் என்பதால் மீண்டும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
மொத்தம் ஏழு முறை முயன்றும் தேர்ச்சி பெறாத நிலையில், இனி தேர்வெழுதும் முடிவில் இல்லை என தெரிவித்துள்ளார். கனடாவில் செவிலியராக பணியாற்றும் கனவை விட்டுவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மணிக்கு 13 டொலர் மட்டுமே ஈட்டும் ஒரு பணி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுவும் முழு நேர பணியல்ல என்கிறார். இதே நிலை தான், 2011ல் கனடாவுக்கு புலம்பெயர்ந்த Leilani Leonardo என்பவரின் கதையும்.
மணிலாவில் நான்கு ஆண்டுகள் செவிலியராக பணியாற்றியுள்ள Leilani மொழித்திறன் தேர்வை இரண்டு முறை எதிர்கொண்டதன் பின்னர் தமது முடிவை மாற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் பத்தாண்டுகளுக்கு பிறகு தமது கனவை நிறைவேற்றும் முனைப்பில் மீண்டும் செவிலியர் பணிக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.