நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உடனடி உத்தரவு
நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
புனித வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆகிய தினங்களை முன்னிட்டு இவ்வாறு தேவாலயங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவாலயத்திற்கு வரும் யாத்திரிகர்கள் மற்றும் அவர்களின் பயணப் பொதிகளை பரிசோதிக்கவும், தேவாலயங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, பொலிஸ் குழுக்கள் மற்றும் அந்தந்த தேவாலயங்களின் பாதிரியார்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் தலைமையக பரிசோதகர்கள் மற்றும் நிலையத் தளபதிகள் தமது பொலிஸ் எல்லைக்குட்பட்ட அனைத்து கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் ஏனைய தேவாலயங்களுக்கும் நேரில் சென்று அருட் தந்தையரையும் நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்குமாறு பொலிஸ் மா அதிபரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான மாவட்ட அலுவலர்கள் நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் பகுதியிலும் உள்ள தேவாலயங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை சரிபார்க்க வேண்டும் என்றும் அதில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |