விண்வெளியில் விந்தை: கருந்துளைகளைக் கூட மிஞ்சும் பிரம்மாண்ட நட்சத்திர வெடிப்பு
பிரபஞ்சத்தின் மிகப் பெரிய நட்சத்திரங்கள் தங்களின் வாழ்நாளின் இறுதியில் எவ்வித எச்சமுமின்றி முழுமையாக அழிந்துவிடும் 'பேர்-இன்ஸ்டெபிலிட்டி சுப்பர்நோவா' (Pair-instability supernova) எனப்படும் அரிய வகை நட்சத்திர வெடிப்பு குறித்த ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக, ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறும்போது (சுப்பர்நோவா), அதன் மையப்பகுதி நியூட்ரோன் நட்சத்திரமாகவோ அல்லது ஈர்ப்பு விசை மிகுந்த கருந்துளையாகவோ மாறும்.
விண்வெளியில் விந்தை
ஆனால், சூரியனை விட 140 முதல் 260 மடங்கு அதிக நிறை கொண்ட ராட்சத நட்சத்திரங்கள் வெடிக்கும்போது, அவை எதையுமே விட்டுச் செல்லாமல் முழுமையாகச் சிதறிவிடும் என்று 1960 ஆண்டுகளில் கணிக்கப்பட்டது.

தற்போது கருந்துளைகள் மற்றும் ஈர்ப்பு அலைகள் (Gravitational waves) குறித்த ஆய்வின் மூலம் இந்த கோட்பாட்டிற்கான மறைமுக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அவுஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், விண்வெளியில் உள்ள 153 ஜோடி கருந்துளைகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
பிரம்மாண்ட வானவேடிக்கை
இதில், சூரியனை விட 44 முதல் 116 மடங்கு நிறை கொண்ட கருந்துளைகள் அந்தப் பகுதியில் அறவே இல்லை என்பது கண்டறியப்பட்டது.

இந்த "தடைசெய்யப்பட்ட வரம்பில்" (Forbidden range) கருந்துளைகள் இல்லாததற்குக் காரணம், அந்த எடையில் உருவாக வேண்டிய நட்சத்திரங்கள் 'பேர்-இன்ஸ்டெபிலிட்டி சுப்பர்நோவா' என்ற அதிபயங்கர வெடிப்புக்கு உள்ளாகி முற்றிலும் மறைந்து போனதே என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் வாழும் நிலையில், இத்தகைய ராட்சத நட்சத்திரங்கள் சில மில்லியன் ஆண்டுகளிலேயே எரிந்து முடிந்து, பிரம்மாண்ட வானவேடிக்கை போல வெடித்துச் சிதறி விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.