கச்சதீவை அரசியலுக்காக கையாள்வதை கைவிட வேண்டும்: என்.எம்.ஆலம்
இந்தியா(India) மத்திய அரசிலும் தமிழகத்திலும் புதிதாக ஒரு நிலைப்பாடாக கச்சதீவு விடயம் தோன்றியுள்ளது. எனவே கச்சதீவை அரசியலுக்காக கையாள்வதை தமிழகமும் மத்திய அரசும் கைவிட வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (08.04.2024) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சட்டவிரோத கடற்றொழில்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா மத்திய அரசிலும் தமிழகத்திலும் புதிதாக ஒரு நிலைப்பாடாக கச்சதீவு விடையம் தோன்றியுள்ளது.
இதை அவர்கள் அரசியலுக்கு பயன்படுத்த கூறி இருந்தாலும் அங்குள்ள கடற்றொழிலாளர்களை குறிப்பாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் இருந்து மாற நினைக்கின்ற கடற்றொழிலாளர்களை இத்தொழிலில் உள் வாங்கி அவர்களை உற்சாக மூட்டி மீண்டும் மீண்டும் அவர்களை சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைக்கும், சட்டவிரோதமாக இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையை முன்னெடுக்க ஆதரிப்பதாக காணப்படுகின்றது.
அரசியல் நோக்கம் ஒரு புறம் இருந்தாலும், இலங்கையில் தனது ஆதிக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகத்திலும் இந்திய மத்திய அரசும் மிகவும் கவனமாக செயல் படுகிறது. கச்சதீவு விடயத்தை பல தடவை தமிழக அரசு தான் மேலோங்கச் செய்துள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து தமிழகம் வலியுறுத்தியது.
தமிழக அரசின் ஒவ்வொரு கால கட்டத்திலான கோரிக்கையை மத்திய அரசு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இன்று அந்த சாதகத்தின் வெளிப்பாடுதான் தமிழகம் தான் கச்சதீவை வழங்கியதற்கு முழுக்காரணம் என்று இன்று அவர்களின் அரசியலை வளர்த்துக் கொள்வதற்காக இந்த விடயத்தை மீண்டும் மீண்டும் ஒரு பூதாகரமான விடயமாக மாற்றியுள்ளனர்.
முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள்
இலங்கை கடற்றொழிலாளர்களை பொறுத்தவரையில் குறிப்பாக வட பகுதி கடற்றொழிலாளர்களை பொறுத்தவரையில் இவர்களுக்கான ஒரே நிலைப்பாடு இந்திய கடற்றொழிலாளர்கள் எமது எல்லையை தாண்டக்கூடாது. எமது எல்லைக்குள் வந்து சட்ட விரோதமான இழுவை மடி தொழிலை முன்னெடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கின்றனர்.
எமது கடற்றொழிலாளர்கள் முகம் கொடுக்கும் துன்பங்களும்,போராட்டமும் அதனை வலியுறுத்தியதாக உள்ளது. தமிழக அரசாக இருந்தாலும்,இந்திய அரசாக இருந்தாலும் அவர்கள் அரசியலுக்காக இவ்விடயத்தை மீண்டும் மீண்டும் பேசி தமிழககடற்றொழிலாளர்களை உற்சாகப் படுத்துவதும் இவ்விடயத்தை கேலிக் கூத்தாக்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இரு நாடுகளுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை கன்னியமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரசியலுக்காக பேசப்படும் விடயமாக இருந்தால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உறவிலும் மக்களின் மனதிலும் பாரிய எதிர்ப்பை உருவாக்கக்கூடும்.
அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள்
எனவே கச்சதீவை அரசியலுக்காக கையாள்வதை தமிழகமும்,மத்திய அரசும் கைவிட வேண்டும். இலங்கை அரசும் வடபகுதியில் உள்ள தமிழ் பிரதிநிதிகளும் இக்கருத்திற்கு எவ்வித கருத்துக்களையும் கூறுவதாக இல்லை.
வட பகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டங்களையும் எதிர்ப்பையும் முன்னெடுத்து வருகின்ற போதும் அவர்கள் மௌனிகளாக உள்ளனர். கடற்தொழில் அமைச்சர் அதற்கு மேலாக ஒரு படி சென்று இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த ஒரு புறம் கருத்தைக் கூறுகிறார்.
மறுபுறம் இந்திய கம்பெனிகளின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களுக்கு கதவை திறந்து விடுகின்றார்.அவர்கள் வந்து செயல்பாட்டை முன்னெடுக்க ஆதரவு வழங்குகின்றார்.
அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பது கேள்விக்குறியாக உள்ளது என கூறியுள்ளார்.. மேலும் கடற்றொழிலாளர்கள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |