கையிருப்பில் உள்ள இரசாயனப் பசளைகள் : விவசாய அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை
இலங்கையின் சில மாவட்டங்களில் பெய்த மழையினால் விவசாயிகள் முன்னா், பயன்படுத்திய சேதனப்பசளைகள், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு வழங்குவதற்காக நாட்டில் இன்னும் இருப்பில் உள்ள இரசாயனப்பசளைகளை விவசாய அமைச்சு பெற்றுக்கொள்ளவுள்ளது.
அண்மைய நாட்களில் பெய்த மழையினால் நுவரெலியா, பதுளை மற்றும் பண்டாரவளை மாவட்டங்களில் மரக்கறி மற்றும் பழ உற்பத்தியாளர்கள் பயன்படுத்திய சேதனப் பசளைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் தரப்புக்கள் தொிவித்துள்ளன.
இதனையடுத்து அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், காய்கறிகளின் விலை கடுமையாக உயரும் என்று அமைச்சா் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளாா்.
இந்தநிலையில் அவசர நடவடிக்கையாக, பசளை இறக்குமதியாளர்களின் களஞ்சியங்களில் உள்ள இரசாயன பசளை இருப்புகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை நெல் விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு விவசாய காப்புறுதிச் சபைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தொிவித்துள்ளாா்.