மனித உரிமைகளுக்கான குரலை கனடா நிறுத்தாது! ஜஸ்ரின் ட்ரூடோ
வெறுப்பிற்கும், வன்முறைக்கும் எதிராக எப்போதும் குரல் கொடுப்பதற்கு உறுதியுடன் இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று 40 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும், 1983ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொடூரமான படுகொலைகள் இடம்பெற்றிருந்தன.
உயிரிழப்புகள் பதிவு
இந்த சம்பவங்களில் ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இடம்பெயர்ந்ததுடன் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கறுப்பு ஜூலையின் எதிரொலி ஆயுத போராட்டமாக உருவெடுத்தது. சோகமான இந்த நாளில் நாம் தமிழ் கனேடியர்கள் மற்றும் ஏனைய கனேடியர்களுடன் இணைந்து பாதிக்கபட்டோரை நினைவேந்துகின்றோம்.
வெறுப்பிற்கும், வன்முறைக்கும் எதிராக எப்போதும் குரல் கொடுப்பதற்கு உறுதியுடன் இருக்கின்றோம்.
மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக கனேடிய நாடாளுமன்றில் பிரகடனம் செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டில் முதன் முதலாக இந்த நாள் அனுஸ்டிக்கப்பட்டது.
உரிமை மீறல்கள்
இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறல்கள், உரிமை மீறல்கள் என்பனவற்றுக்கு எதிர்வுகூறப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதனை கனடா ஒரு போதும் நிறுத்திக் கொள்ளாது.
தமிழ் கனேடியர்கள் நாட்டுக்கு வழங்கி வரும் பங்களிப்பினை நன்றியுடன் பாராட்டுகின்றோம்.
கறுப்பு ஜூலை மற்றும் அதன் பின்னரான வன்முறைகளில் துன்பத்தை எதிர்கொண்டவர்களுக்கும் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் கனேடிய அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |