விரைந்து செயற்படுங்கள்! வரப் போகும் ஆபத்து குறித்து எச்சரிக்கும் இராஜாங்க அமைச்சர்
டெல்டா திரிபானது மிகவும் வேகமாக பரவக் கூடிய வைரஸ் ஆகும். எனவே மக்கள் ஒவ்வொருவரும் தாமாகவே தம்மை பாதுகாத்துக் கொள்வார்களாயின் இவ்வாறு வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புக்கள் இருக்காது என கோவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை முடக்குவது மாத்திரமே கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு அல்ல.
மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படாவிட்டால் நாட்டை முடக்கினாலும் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. இது வாழ்க்கையுடனான போராட்டமாகும்.
எனவே சகலரும் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். தற்போதும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாதோர் காணப்படுவார்களாயின் விரைந்து அருகிலுள்ள தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.
எனவே தடுப்பூசிகள் வகைகளை தேடிக் கொண்டிருக்காமல் அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போது பயன்படுத்தப்படுகின்ற சகல தடுப்பூசிகளும் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற உதவும் என்று மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.



