பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
வரவு செலவுத் திட்டத்தினூடாக பாடசாலைகளின் நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று (28.07.2023) கல்வி அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2024 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகளை நடத்துவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் மற்றும் மின்சாரக் கட்டண நிவாரணம்
மேலும், அரசாங்க அச்சுத் திணைக்களம் 2024 ஆம் ஆண்டுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும், அச்சடிக்கும் பணியை நவம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம். அரச சேவையில் தற்போதுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் 12,000 பேர் பாடசாலைகளின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய சேவை அமைப்புடன் கூடிய ஊழியர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் பாடசாலைகளின் நிதி மற்றும் நிர்வாக விடயங்களை அதிபர்கள் இலகுவாக நிர்வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினூடாக பாடசாலைகளின் நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதல் தவணை பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.