இந்தியாவுக்கு எதிரான செயற்பாட்டுக்கு இலங்கை அனுமதிக்காது..! மீண்டும் வலியுறுத்திய உயர்ஸ்தானிகர்
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை தனது பிரதேசத்தைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே மீண்டும் உறுதியளித்துள்ளார்.
பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாகவும், பல சந்தர்ப்பங்களில் அதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்துழைப்பின் அவசியம்
இந்தியாவும் இலங்கையும் கடலை மட்டுமன்றி பாதுகாப்பையும் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஆராய்ச்சி, பாதுகாப்பு மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயம், நாட்டின் நிலப்பரப்பை விட சுமார் எட்டு மடங்கு பெரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடல் வளங்கள், மீன்பிடித்துறை, துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு ஆகியவை நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் போது, கொழும்பில் ஏற்கனவே நிலைகொண்டிருந்த இந்தியக் கடற்படைக் கப்பல்கள் சில மணிநேரங்களுக்குள் நிவாரணப் பொருட்களை இறக்கத் தொடங்கியதாகவும், அவசரகால உதவிகளில் இந்தியா முதலாவது மற்றும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மற்றும் இலங்கை விஞ்ஞானிகளுக்கு இடையில் கடல்சார் தரவுகள், ஆராய்ச்சி அறிவு மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒத்துழைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தோல்விக்குப் பின்னர் பிரித்தானிய டென்னிஸ் வீராங்கனைக்கு கொலை மிரட்டல் - WTA அமைப்பு அதிரடி நடவடிக்கை