தோல்விக்குப் பின்னர் பிரித்தானிய டென்னிஸ் வீராங்கனைக்கு கொலை மிரட்டல் - WTA அமைப்பு அதிரடி நடவடிக்கை
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் தோல்வியடைந்த பிரித்தானிய வீராங்கனை ஜோடி பரேஜுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக கொலை மிரட்டல்கள் மற்றும் அவதூறான செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
27 வயதான ஜோடி பரேஜ் 16 மாதங்களுக்குப் பின்னர் தனது முதல் பிரதான WTA ஒற்றையர் சுற்றுப் போட்டியில் பங்கேற்றிருந்தார்.
உலகத் தரவரிசையில் 474ஆவது இடத்தில் உள்ள அவர், இந்தியாவின் வைஷ்ணவி அத்கருக்கு எதிரான போட்டியில் முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய போதிலும், அடுத்த இரண்டு செட்களையும் 3-6, 5-7 என இழந்து தோல்வியடைந்தார்.
டென்னிஸ் வீராங்கனைக்கு குவியும் மிரட்டல்கள்
இதனைத் தொடர்ந்து தனக்கு அனுப்பப்பட்ட அவதூறான மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த தனிப்பட்ட செய்திகளின் காணொளியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், “சுற்றுப்போட்டிக்குத் திரும்பியதற்கான வரவேற்பு இதுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன் வீராங்கனை ஈவா லைஸும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க WTA அமைப்பு எப்போது நடவடிக்கை எடுக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டில் டென்னிஸ் வீராங்கனைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் 12,000க்கும் அதிகமான அவதூறான பதிவுகளும் செய்திகளும் பதிவாகியுள்ளதாக ஆய்வறிக்கையொன்றில் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.