நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 648 பேர் பாதிப்பு - 3 பேர் மாயம் (VIDEO)
சீரற்ற வானிலையால் மலையகத்தில் பல இயற்கை அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய நாவலப்பிட்டி கெட்டபுலா - அக்கரகந்த தோட்டத்தில் மூன்று பேர் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது 3 பிள்ளைகளின் தாயான 45 வயதான ஜெயலெட்சுமி கயிற்றின் உதவியுடன் பாலத்தை கடக்க முற்பட்ட போது கை நழுவி ஆற்றில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து அத்தோட்டத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 52 வயதான சத்தியசீலன் மற்றும் 3 பிள்ளைகளின் தந்தையான 36 வயதான சந்திரமோகன் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயற்சித்த போது, அவர்களும் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.
இதன்போது காணாமல்போனோரை தேடும் பணிகளுக்காக இன்று கொத்மலை இராணுவ நிலையத்தின் இராணுவத்தினர் வருகைத் தந்துள்ளதுடன், நாவலப்பிட்டி பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து, காணாமல்போனவர்களைத் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன்கூடிய கடும் மழையினால் 254 குடும்பங்களை சேர்ந்த 648 பேர் நிர்கதியாக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
இச்சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிக இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈட்டுத்தொகையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி
அந்த வகையில், நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
மண்சரிவில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் பொலிஸ், இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி மூவர் மாயம்
இவ்வாறு உயிரிழந்தவர் டெப்லோ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாவலப்பிட்டி - கெட்டபுலா,அக்கரவத்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கி பெண்ணொருவரும் ஆண்கள் இருவரும் காணாமல்போயுள்ளனர்.
மேலும் கினிகத்தேனை - பொல்பிட்டி பகுதியில் 5 வயது சிறுமி ஒருவரும், அவரது பாட்டியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.