சீரற்ற காலநிலையால் மலையக தொடருந்து சேவைகள் ரத்து
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக பகுதிக்கு இடம்பெறும் 12 தொடருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து நிலையத்தின் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மலையகத்தில் மண்சரிவு ஏற்படுவதால் நேற்று முதல் தொடருந்துகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி மலையத்திற்கு ஆறு சேவைகளும் கொழும்புக்கு ஆறு சேவைகளுமாக 12 சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
வெறிச்சோடி காணப்படும் தொடருந்து நிலையங்கள்
கொழும்பு பதுளை பிரதான புகையிரத வீதியில் வட்டவளை ரொசல்ல தலவாக்கலை கலப்பட உள்ளிட்ட பல இடங்களில் பாரிய கற்களும் மண் மேடுகளும் சரிந்து விழுந்துள்ளன.
தற்போது தொடருந்து வீதியில் கொட்டிக்கிடக்கும் மண்ணையும் பாரிய கற்களையும் அகற்றும் பணிகள் புகையிரத ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த பாதைகள் சீர் செய்யப்பட்டவுடன் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும்
என தொடருந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தொடருந்து சேவைகள் இடம்பெறாததன் காரணமாக மலையக தொடருந்து
நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.