120 வருட பழமையான விளையாட்டு; இலங்கையில் அறிமுகம்!
120 வருடங்களுக்கும் பழமையான நெதர்லாந்து நாட்டு கூடைப்பந்து கடற்கரை விளையாட்டு (KORFBALL) இலங்கையில் முதன்முறையாக திருகோணமலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
நேற்று (13) பிற்பகல் திருகோணமலை பிரதான கடற்கரையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கூடைப்பந்து (KORFBALL) போட்டி உலக நாடுகள் உட்பட இலங்கையில் உள்ளக அரங்கு மற்றும் வெளி மைதானங்களில் மாத்திரமே விளையாடப்பட்டு வந்தது. உலகின் 68வது நாடாக 2015ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
கூடைப்பந்து விளையாட்டு இலங்கையில் முதல் தடவையாக கடற்கரையில் விளையாடுவதற்கு 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி கூடைப்பந்து- (KORFBALL) இலங்கைக்கான அமைப்பாளர் ஜோகஸ் வேன் நுன்ஸ்பீட் (JOSE VAN NUNSPEET) அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்போட்டியின் முக்கிய அம்சமாக உள்ளக அரங்கு உட்பட வெளியக மைதானங்களில் அணிக்கு 8 போட்டியாளர்கள் அடங்குவர். அவர்களில் கட்டாயமாக நான்கு பெண்களும் நான்கு ஆண்களுமாக அணியில் காணப்பட வேண்டும்.
அதனடிப்படையில் கடற்கரையில் விளையாடப்படும் கூடைப்பந்து (KORFBALL) போட்டியில் அணிக்கு நான்கு பேர் மாத்திரமே விளையாட முடியும். அவர்களில் இரு ஆண்களும் இரு பெண்களும் என விளையாடுவது கட்டாயம் என இதன்போது தெரிவிக்கப்பட்டது. மேலும் உலக நாடுகளில் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இவ்விளையாட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் 68வது நாடாக இலங்கையிலும் இப்போட்டி அறிமுகம் செய்யப்பட்டு இன்றைய தினம் இலங்கையில் முதல் முறையாக கடற்கரையில் விளையாடுவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இப்போட்டி அறிமுக விழாவில் இலங்கை கடற்படையின் கிழக்கு மாகாண தளபதி
ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ், கிழக்குமாகாண பல்கலைக்கழக திருகோணமலை வளாக
பேராசிரியர் கனகசிங்கம், திருகோணமலை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
பிரசன்ன, இலங்கை இராணுவத்தின் திருகோணமலை தலைமையக இரண்டாவது கட்டளை தளபதி
மேஜர் எம்.என்.கே.குமார, நெஸ்லே லங்கா தனியார் நிறுவனத்தின் தேசிய விற்பனை
நிர்வாக அதிகாரி மஞ்சுள நரங்கோட, கூடைப்பந்து - ஸ்ரீலங்கா அமைப்பின் பொதுச்
செயலாளர் புஷ்பகுமார மதுரப்பெருமா மற்றும் நடுவர்கள் பிரதேச விளையாட்டு
பயிற்றுவிப்பாளர், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.