எரிபொருள் விலை உயர்வு மற்றும் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இம்மாத இறுதி வரை எரிபொருள் விலையை உயர்த்தாமல் தற்போதைய விலையிலேயே பராமரிக்க முடியும் என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
இன்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகம்
அடுத்த மூன்று மாதங்களில் பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படாத பட்சத்தில், தற்போதைய எரிபொருள் விலையையும் விநியோக நிலையையும் பராமரிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் நிறுவனங்களால் எரிபொருள் விநியோகம் குறைக்கப்படுவதால், சில பகுதிகளில் தற்காலிக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய நிலைமை ஏற்படக்கூடிய சுமார் 62 பகுதிகள் மூன்று வாரங்களுக்கு முன்பு அடையாளம் காணப்பட்டதாகவும், அப்பகுதிகளுக்கு அதிக எரிபொருளை விடுவிப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை
மேலும், எரிபொருள் பற்றாக்குறை குறித்தும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் காத்திருப்பது குறித்தும் பொதுமக்கள் தேவையற்ற கவலை கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கையிருப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் எரிபொருள் கையிருப்பு குறித்த ஆய்வு நடத்தப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வின்போது, மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்களை அவசரமாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாதத்திற்குத் தேவையான அளவைத் தாண்டி கூடுதல் எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.