நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை! இந்தியாவின் ஆதரவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஆட்சியில் இருந்த ராஜபக்ச குழுவினர், வெளியேறியதன் மூலம் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் ராஜபக்சக்களின் அடிப்படை பௌத்த சிங்கள ஆதரவு தளமும் தகர்ந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராகப் பணியாற்றிய முன்னாள் இந்திய இராஜதந்திரி அசோக் காந்தா குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இதன் மூலம் மஹிந்தவுக்கு இறக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் இலங்கையின் அரசியலில் இருந்து வெளியேறவில்லை.
நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை
நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா வழங்கிய சுமார் 6 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளது.
இந்தியா எந்த நாட்டிற்கும் இவ்வளவு பெரிய உதவிப் பொதியை வழங்கவில்லை. அதேநேரம் இந்த அளவிலான ஆதரவு தொடர்ந்தும் சாத்தியமில்லை என்று அவர் எச்சரித்துள்ளார்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை தேசத்திற்கு பொருளாதார ஆதரவை வழங்க இந்தியா எவ்வளவு தூரம் செல்லும் முடியும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலாக, இந்தியா சர்வதேச சமூகத்தை அணிதிரட்டி இலங்கைக்கான சர்வதேசநாணய நிதியத்தின் (IMF) உதவியை விரைவாகப் பெற உதவ வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
கடுமையான கடன் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நாடுகள்
சீன ஆய்வுகளுக்கான சென்னை மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் தூதர், 40 க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையான கடன் அழுத்தத்தை எதிர்கொள்வதால், சர்வதேச காலநிலை கூட அவ்வளவு சாதகமாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய உக்ரைன் போர் இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் ஆதரவை வழங்குவதில் இருந்து மேற்கத்திய சக்திகளைத் தடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது சில காலமாக கட்டியெழுப்பப்பட்டு வந்ததை சுட்டிக்காட்டிய அவர், கட்டமைப்பு மற்றும் மரபு சார்ந்த பிரச்சினைகளின் கலவையினால் தற்போது நிலவும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் நெருக்கடி குறித்து கருத்துரைத்துள்ள அவர், கடுமையான கொந்தளிப்பு
காலத்தின் பின்னர் நிலைமை சீரடைந்துள்ளதாகவும், எனினும் போராட்டங்கள்
முடிவுக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.