அனைத்து கடன் வழங்குநர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்
இலங்கை அரசாங்கம் வெளி கடனாளிகளுடன் ஏதேனும் உடன்படிக்கைக்கு வரும் முன்னர் நிபந்தனைகளை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா கோரியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து கடன் வழங்குநர்களுடனும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறந்த கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம்
இலங்கையின் கடனாளிகளுடன் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் இணங்கினால், அதற்கு நாடாளுமன்றத்தின் இரு தரப்பின் உடன்பாடு தேவை.
ஏனெனில் தற்போதைய அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
'நாங்கள் முக்கியமான தகவல்களைக் கோரவில்லை, ஆனால் நாங்கள் கடனாளிகளுக்கு என்ன சொல்லப்போகிறோம், எந்த திசையில் செல்கிறோம் என்பது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டால் மிகவும் நல்லது,' என்று அவர் கூறியுள்ளார்.
கடன்களை மறுசீரமைப்பதற்கு கடுமையான நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை விவாதம் நடத்துவது இதுவே முதல்முறை என்பதால் அந்த நிபந்தனைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவுக்குப் பதிலளித்த அமைச்சர் பந்துல
குணவர்தன, இதுவரையில் அவ்வாறான ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.