இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இலங்கையின் தற்போதைய மக்கள் தொகையில் ஒவ்வொரு 50 பேரில் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள புள்ளி விபரத்தை மகளிர், சிறுவர் விவகார மற்றும் மனிதப் பலு வலுவூட்டல் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, புனர்வாழ்வு பணியகத்தினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'முழு நாடும் ஒன்றாக' என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
போதைப்பொருளுக்கு இரையாகிவரும் மக்கள்
"இன்று எமது நாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக மோசமான முறையில் போதைப்பொருளுக்கு இரையாகி வருகின்றனர்.

இதன் நேரடி விளைவாக இந்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தாய்மார்களும், பெண்களும் சொல்லொணாத் துயரங்களுக்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர்.
குடும்ப கட்டமைப்புகள் சீர்குலைந்து, பிள்ளைகளின் கல்வி முற்றாகப் பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கையே இருண்டு போகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாபெரும் பேரழிவிலிருந்து எமது தாய்நாட்டை மீட்பதற்கு ஒட்டுமொத்த சமூகத்தினதும் பாரிய கூட்டு முயற்சி அவசியமாகும்.போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகச் சமீபகாலமாக பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி கைதுகளின் மூலம், அரசியல் பின்னணிகளுக்கும் போதைப்பொருள் குற்றங்களுக்கும் இடையே நிலவி வரும் மிக நெருக்கமான கள்ளத்தொடர்புகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
சட்டத்தின் பிடியில் சிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்
சட்டத்தின் பிடியில் சிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை எவ்வித தடையுமின்றிச் சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக, அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களை ஆயுதங்களைக் காண்பிப்பதற்காக வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி நாடகமாடி, பின்னர் அவர்களை நீண்டகாலம் தடுத்து வைத்து, இறுதி நேரத்தில் அவர்களைச் சட்டத்திலிருந்து விடுவிப்பதற்காக ஒட்டுமொத்த அரச இயந்திரமே தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அன்று அத்தகையதொரு ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரமே இந்நாட்டில் காணப்பட்டது. இலங்கையை ஒரு சர்வதேச குற்றவியல் நாடாக மாற்றுவதற்குப் பின்னணியில் இருந்து கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதி முயற்சிகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன.
இக்குற்றவாளிகள் தங்களின் தராதரங்களைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர்.
இந்த தூய்மைப்படுத்தும் செயற்பாட்டில் தற்போதைய அரசாங்கம் எவ்வித அரசியல் காரணங்களுக்காகவும் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.