இலங்கையில் வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
மேலும் சுமார் 5 மில்லியன் மக்கள் தங்களது வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வரி செலுத்துவோர் அடையாள எண் நிலை
இருப்பினும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த எண்களை தபால் மூலம் பயனாளர்களுக்கு அனுப்பாததால், பல தனிநபர்கள் தங்களது வரி செலுத்துவோர் அடையாள எண்களின் நிலை குறித்து அறியாமல் இருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரி செலுத்துவோர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்துக்குச் சென்று, தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் தமது வரி செலுத்துவோர் அடையாள எண்களின் நிலையை சரிபார்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டில் (2025) உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ரூ. 2,164 பில்லியன் வரி நிலுவை தொகையை வசூலிக்க வேண்டியிருந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வசூலிக்கப்படாத பணம்
மேலும், கடந்த ஆண்டில் (2025) வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய ரூ. 2,164 பில்லியன் வரி நிலுவைத் தொகையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வசூலிக்கவில்லை என்பதையும் அந்த அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

அந்த வருவாய் 2025 ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்டிருந்தால், அந்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை முழுமையாகக் குறைத்திருக்க முடியும் என்றும் தணிக்கை அறிக்கை குறிப்பிடுகின்றது.
2025 ஆம் ஆண்டிற்காக நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கையில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.