சந்திரகுமார் அணியோடு சேர்ந்து அரசியலிலே செயற்பட முடியாது! சிறீதரன் எம்.பி. திட்டவட்டம்.
சந்திரகுமார் அணியோடு இணைந்து அரசியலிலே செயற்பட முடியாது. சிங்களக் கட்சிகளோடு இணைந்து இந்தத் தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து, தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து, இப்போது தமிழ்த் தேசியம் பேசினால்தான் மக்களுடைய வாக்குகளைக் கவரலாம் என வருபவர்களை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலயரங்கில் நேற்று(15.04.2026) இடம்பெற்ற "தையிட்டி அடுத்து என்ன?" எனும் கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியினுடனான பேச்சுவார்த்தை
ஊடகவியலாளர்களின் கேள்வியும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பதிலும் பின்வருமாறு, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் பேச்சுகள் இடம் பெற்று வருகின்றன. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? என கேள்வியெழுப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் பேச்சுகள் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். நல்லது நடந்தால் வரவேற்பேன் என பதில் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தப் பேச்சுகள் வெற்றி பெற்றால் அந்தக் கூட்டணியில் தொடர்ந்து செயற்படுவீர்களா? என கேட்கப்பட்டதற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தொடர்ந்தும் நான் அங்கம் வகிக்கின்றேன். என்னை இன்னமும் தமிழரசுக் கட்சியிலிருந்து விலக்கவில்லை. விலக்கினால் சேர்ந்து செயற்படுவதா, இல்லையா என்பது தொடர்பில் முடிவு எடுப்பேன் என பதில் கொடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள்.
எனினும், இதில் அங்கம் வகிக்கக்கூடிய மற்றுமொரு கட்சி சிங்களக் கட்சிகளோடு இணைந்து இந்தத் தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து, தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து, இப்போது தமிழ்த் தேசியம் பேசினால்தான் மக்களுடைய வாக்குகளைக் கவரலாம் என வருபவர்களை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.
அந்தக் கட்சியோடு இணைந்து எந்தவொரு தேர்தலிலும் பங்குபற்றக் கூடிய சூழ்நிலை கிளிநொச்சியில் இருக்காது. யாழ்ப்பாணத்தில் யாரேனும் சேர்ந்து தேர்தலிலே போட்டியிட்டால் அது அவர்களைப் பொறுத்தது.
மக்கள் முடிவே சிறந்தது..
சந்திரகுமார் அணியோடு இணைந்து அரசியலிலே செயற்பட முடியாது என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் நான் வெளிப்படையாகக் கூறியிருந்தேன். எங்கள் கட்சியினுடைய தலைவருக்கும் ஏனையவர்களுக்கும் இதனை தெளிவாகக் கூறியிருக்கின்றேன்.

வவுனியாவில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சிறீரெலோவோடு இணைந்து செயற்படுவது தொடர்பில் எனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். இவர்களால் தமிழரசுக் கட்சிக்கு ஆபத்து வரும் என்பதையும் எதிர்வு கூறியிருந்தேன். இன்று சிறீரெலோ கட்சியின் தலைவர் எதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இதேபோன்று சந்திரகுமாரும், இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் இறக்கவில்லை, இறந்தவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளே எனக் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தியவர்.
பல பாடசாலைகளில் இருந்த அதிபர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்தவர். தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே தனது பயணத்தை மேற்கொண்டவர். இன்று தமிழ்த் தேசியமே கதியென அவர் வந்திருக்கின்றார். இவ்வளவு காலமும் இவர்கள் செய்தது சரியா என்பதை மக்கள் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.