தமிழரின் இழப்புகளுக்கான ஒரே தீர்வு: அநுர அரசிடம் ஸ்ரீநேசன் எம்.பி. இடித்துரைப்பு
புதிய அரசமைப்பில் கூட்டாட்சி முறைமையிலான சமஷ்டி தீர்வே தமிழர்களுக்கு வேண்டும் அதுவே தமிழர்களின் இலக்கு என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஸ்ரீநேசன்(Gnanamuththu Srinesan)தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"தேசிய இனப்பிரச்சினைக்குக் கூட்டாட்சி முறைமையிலான சமஷ்டி அடிப்படையிலான தீர்வே ஒரே வழி. அந்தத் தீர்வையே வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.
சமஷ்டி தீர்வு
சமஷ்டி தீர்வை வேண்டியே வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தார்கள். எனவே, எமது மக்களின் விருப்பத்துக்கு மாறாகச் செயற்படமாட்டோம் புதிய அரசமைப்பில் ஒற்றையாட்சித் தீர்வை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
மத்தியில் அதிகாரங்கள் குவிந்திருக்கும் இந்த ஒற்றையாட்சியால்தான் தமிழ் மக்கள் பேரவலங்களைச் சந்தித்தார்கள். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, புதிய அரசமைப்பை வரைவைத் தயாரிக்கும்போது எமது நிலைப்பாட்டை உதாசீனம் செய்ய முடியாது.
இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த பல நாடுகளில் கூட்டாட்சி (சமஷ்டி) முறைமை வெற்றியளித்துள்ளது.
எனவே, புதிய அரசமைப்பு ஊடாக இலங்கையிலும் இந்த முறைமை அமுலாக வேண்டும். அதிகாரங்கள் மீளப்பெற முடியாதவாறு பகிரப்பட வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லாமல் போகும்"-என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |